தர்மபுரி கலெக்டர் அலுவலக வளாகத்தில் தீக்குளிக்க முயன்ற தம்பதியால் பரபரப்பு

தர்மபுரி கலெக்டர் அலுவலக வளாகத்தில் தம்பதி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2019-10-21 22:30 GMT
தர்மபுரி,

தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்க மணியம்பாடியை சேர்ந்த முத்துசாமி, மனைவி செந்தாமரையுடன் வந்தார். அவர்கள் பையில் மறைத்து கொண்டு வந்த மண்எண்ணெயை திடீரென தங்கள் உடலில் ஊற்றி கலெக்டர் அலுவலக வளாகத்தில் தீக்குளிக்க முயன்றனர். இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசார் ஓடி சென்று தம்பதியின் தீக்குளிப்பு முயற்சியை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினார்கள்.

அப்போது அந்த தம்பதி கூறுகையில், எங்கள் மகன் போட்டி தேர்வுக்கு பயிற்சி வகுப்பில் சேர்ந்து படித்து வருகிறான். அவனும், எங்கள் ஊரை சேர்ந்த 17 வயது பெண்ணும் காதலித்து வருவது சில மாதங்களுக்கு முன்பு எங்களுக்கு தெரியவந்தது. அந்த பெண்ணை அவருடைய பெற்றோர் வேறு ஒருவருக்கு திருமணம் செய்து வைத்தனர். இதனால் அந்த பெண் தற்கொலைக்கு முயன்றார். இதனால் எங்கள் மகனும் வி‌‌ஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றான்.

இந்த நிலையில் அந்த பெண்ணின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் எங்களுக்கு கொலை மிரட்டல் விடுத்து வருகிறார்கள். இதுதொடர்பாக கடத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்து உள்ளோம். எங்களுக்கும், எங்கள் மகனுக்கும் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று அவர்கள் தெரிவித்தனர். இதுதொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கலெக்டர் அலுவலக வளாகத்தில் தம்பதி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்