கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தை ம.தி.மு.க.வினர் முற்றுகை
ஓடை ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தி, கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தை ம.தி.மு.க.வினர் நேற்று முற்றுகையிட்டனர்.
கோவில்பட்டி,
கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தை ம.தி.மு.க. நகர செயலாளர் பால்ராஜ் தலைமையில் அக்கட்சியினர் நேற்று முற்றுகையிட்டு, கோரிக்கை மனு வழங்கினர்.
அந்த மனுவில், கோவில்பட்டியை அடுத்த இலுப்பையூரணி நெடுங்குளம் கண்மாய் முற்றிலும் தூர்ந்து விட்டது. அந்த கண்மாய்க்கு தண்ணீர் வரக்கூடிய நீர்வரத்து ஓடை மற்றும் மூப்பன்பட்டி கண்மாயில் இருந்து நெடுங்குளம் கண்மாய்க்கு வரக்கூடிய மறுகால் ஓடை ஆகியவற்றில் ஆக்கிரமிப்புகள் பெருகி விட்டன. இதேபோன்று அனைத்து நீர்நிலைகளிலும் ஆக்கிரமிப்புகள் உள்ளன.
எனவே நீர்வரத்து ஓடைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, மழைக்காலத்தில் நீர்நிலைகளுக்கு தடையின்றி தண்ணீர் வர ஏற்பாடு செய்ய வேண்டும்.
மேலும் விவசாயிகளுக்கு அனைத்து வகை உரங்களும் தட்டுப்பாடின்றி கிடைக்க வேண்டும். விவசாயிகளுக்கு வட்டியில்லாத நகைக்கடன் வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
அப்போது ம.தி.மு.க. நகர துணை செயலாளர் வனராஜன், நகர இளைஞர் அணி செயலாளர் லவராஜா, மாநில தேர்தல் பணிக்குழு துணை செயலாளர் கேசவ நாராயணன், மாவட்ட பொறியாளர் அணி செயலாளர் ராம்குமார் மற்றும் பலர் உடன் இருந்தனர். மனுவை பெற்று கொண்ட உதவி கலெக்டர் விஜயா, இதுகுறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக தெரிவித்தார். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.