கோபால்பட்டியில் தனியார் நிதிநிறுவனத்தில் கொள்ளை முயற்சி - பெண் உள்பட 2 பேர் கைது

கோபால்பட்டியில் தனியார் நிதிநிறுவனத்தில் கொள்ளையடிக்க முயன்ற பெண் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-10-21 22:30 GMT
கோபால்பட்டி, 

சாணார்பட்டி ஒன்றியம் கோபால்பட்டியில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு எதிரில் தனியார் நிதி நிறுவனம் ஒன்று முதல்தளத்தில் செயல்பட்டு வருகிறது. நேற்று விடுமுறை என்பதால் நிதி நிறுவனம் திறக்கப்படவில்லை. இந்தநிலையில் இரவு 7 மணி அளவில் இளம்பெண்ணும், வாலிபர் ஒருவரும் சேர்ந்து நிதி நிறுவனத்தின் பூட்டை உடைத்து கொண்டிருந்தனர்.

இதையடுத்து சத்தம் கேட்டு அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சந்தேகத்தின் பேரில் அவர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் 2 பேரும் தாங்கள் நிதிநிறுவனத்தில் வேலை பார்ப்பதாகவும், சாவி தொலைந்ததால் பூட்டை உடைத்து கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். இருப்பினும் அவர்களது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த பொதுமக்கள் 2 பேரையும் பிடித்து சாணார்பட்டி போலீசில் ஒப்படைத்தனர்.

விசாரணையில் அந்த இளம்பெண் திண்டுக்கல் மேற்கு அசோக்நகரை சேர்ந்த பவித்ராசெல்வி (வயது 23), அந்த வாலிபர் சாணார்பட்டி அருகேயுள்ள வி.மேட்டுப்பட்டி கிராமத்தை சேர்ந்த கோபாலகிரு‌‌ஷ்ணன் (28) என்பது தெரியவந்தது. உறவினர்களான இவர்கள், கொள்ளையடிப்பதற்காக நிதி நிறுவனத்தின் பூட்டை உடைத்ததும் தெரியவந்தது.

இந்த நிதிநிறுவனத்தில் கள அலுவலராக பணிபுரியும் ஒரு பெண் அதிகாரிக்கு தற்காலிக உதவியாளராக பவித்ராசெல்வி பணியாற்றி வந்துள்ளார். இதை வைத்து நிறுவனத்தில் வேலை பார்ப்பது போல் பவித்ராசெல்வி தனது உறவினருடன் சேர்ந்து கொள்ளையடிக்க முயன்றது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், 2 பேரையும் கைது செய்தனர். மேலும் பூட்டை உடைக்க பயன்படுத்திய சுத்தியல் பறிமுதல் செய்யப்பட்டது. பொதுமக்கள் சந்தேகப்பட்டு அவர்களை பிடித்து விசாரித்ததால் நிதிநிறுவனத்தில் வைத்திருந்த ரூ.20 லட்சம் தப்பியது. ஆட்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் நிதி நிறுவனத்தின் பூட்டை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்