புதுவை காமராஜ் நகர் தொகுதியில் இன்று வாக்குப்பதிவு - பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்
புதுவை காமராஜ் நகர் தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடக்கிறது. இதையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
புதுச்சேரி,
புதுவை காமராஜ் நகர் தொகுதி இடைத்தேர்தல் இன்று(திங்கட்கிழமை) நடைபெற உள்ளது.
இதில் ஜான்குமார்(காங்கிரஸ்), புவனேஸ்வரன்(என்.ஆர்.காங்), வெற்றிச்செல்வம்(மக்கள் முன்னேற்ற காங்கிரஸ்), பிரவீனா (நாம் தமிழர் கட்சி) உள்பட 9 பேர் போட்டியிடுகின்றனர். தேர்தலை நேர்மையாகவும், அமைதியாகவும் நடத்த தேர்தல் ஆணையம் அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளது. இதற்காக 21 இடங்களில் 32 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
வாக்காளர் அடையாள அட்டை தவிர தேர்தல் கமிஷன் அறிவுரைப்படி 11 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காண்பித்து ஓட்டுப்போடலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. வாக்குச்சாவடிகளில் குடிநீர், கழிப்பறை, நிழற்பந்தல், மாற்றுத்திறனாளிகள், முதியவர்களுக்கு சாய்வுதளம் போன்ற அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
அனைத்து வாக்குச்சாவடிகளிலும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்துடன் வி.வி.பாட் எந்திரமும் பயன்படுத்தப்பட உள்ளது. வாக்குச்சாவடிகள் அனைத்தும் வலைதளம் மூலம் நேரடியாக கண்காணிக்கப்பட உள்ளன. தேர்தல் அதிகாரிகள் அனைவரும் நேற்று மதியம் வாக்குச்சாவடிகளுக்கு வந்து பொறுப்பேற்றுக்கொண்டனர்.
இங்கு துணை ராணுவ படையினரும், புதுவை போலீசாரும் இணைந்து பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 7 வாக்குச்சாவடிகள் பதற்றம் நிறைந்தவையாக அடையாளம் காணப்பட்டு அங்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாக்குப்பதிவின் போது யாராவது வன்முறையில் ஈடுபட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
தேர்தலையொட்டி காமராஜ் நகர் தொகுதியில் உள்ள அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்களில் பணியாற்றுபவர்களுக்கு இன்று சம்பளத்துடன் கூடிய விடுமுறை விடப்பட்டுள்ளது. அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்க புதுவை மாநிலத்தில் 3 நாட்கள் மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன. வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள 24-ந்தேதி அன்றும் மதுக்கடைகள் மூடப்படுகிறது.
ஏற்கனவே வேட்பாளர்களின் படம், சின்னங்கள், பொருத்தப்பட்டு லாஸ்பேட்டையில் உள்ள மோதிலால் நேரு பாலிடெக்னிக் கல்லூரியில் உள்ள பாதுகாப்பு அறையில் (ஸ்ட்ராங் ரூம்) வாக்குப்பதிவு எந்திரங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு இருந்தன.
நேற்று காலை மாவட்ட தேர்தல் அதிகாரியும், மாவட்ட கலெக்டருமான அருண், தேர்தல் நடத்தும் அதிகாரி முகமது மன்சூர் முன்னிலையில் வாக்குச்சாவடி அதிகாரிகளிடம் அவை ஒப்படைக்கப்பட்டன. அப்போது அவர்களிடம் மாதிரி வாக்குப்பதிவு எவ்வாறு நடத்த வேண்டும், வாக்குப்பதிவு நேரத்தில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரியும் கலெக்டருமான அருண் விளக்கி கூறினார்.
வாக்குப்பதிவு எந்திரங்களை பெற்றுக்கொண்ட வாக்குச்சாவடி அதிகாரிகள் அதனை தங்களது வாக்குச்சாவடிகளுக்கு போலீஸ் பாதுகாப்புடன் எடுத்துச் சென்றனர். இன்று (திங்கட்கிழமை) காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது. வாக்குச்சாவடி முகவர்கள் முன்னிலையில் வாக்குப்பதிவு எந்திரங்கள் முத்திரை பிரிக்கப்பட்டு முதலில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெறும்.
அதன்பிறகு வாக்காளர்கள் அனுமதிக்கப்பட்டு வாக்குகள் பதிவு செய்யப்படும். மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். வாக்குச்சாவடிகளுக்கு செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. காமராஜ் நகர் தொகுதியில் 11 வெளிநாடு வாழ் இந்தியர்கள் உள்பட 35 ஆயிரத்து 9 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 17 ஆயிரத்து 47 பேர் ஆண்கள். 17 ஆயிரத்து 961 பேர் பெண்கள். ஒருவர் 3-ம் பாலினத்தவர்.
வாக்குப்பதிவு முடிந்ததும் வாக்கு எந்திரங்கள் அரசியல் கட்சிகளின் முகவர்கள் முன்னிலையில் முத்திரை வைக்கப்பட்டு பாதுகாப்புடன் மீண்டும் லாஸ்பேட்டையில் உள்ள மோதிலால் நேரு பாலிடெக்னிக் கல்லூரிக்கு எடுத்து வரப்படும். அங்குள்ள பாதுகாப்பு அறையில் (ஸ்ட்ராங் ரூம்) அந்த எந்திரங்கள் வைக்கப்பட உள்ளன. அங்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு அவை பாதுகாக்கப்படும். வருகிற 24-ந்தேதி அங்கிருந்து அந்த மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வெளியே எடுத்து வரப்பட்டு வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.