தொழிலாளர்களை பணி நீக்குவது கூடாது - தொழிற்சாலைகளுக்கு சீனியர் போலீஸ் சூப்பிரண்டு அறிவுறுத்தல்
தொழிலாளர்களை தொழிற்சாலைகள் பணி நீக்கம் செய்யக் கூடாது என்று சீனியர் போலீஸ் சூப்பிரண்டு ராகுல் அல்வால் அறிவுறுத்தினார்.
திருபுவனை,
புதுச்சேரி சட்டம்- ஒழுங்கு சீனியர் போலீஸ் சூப்பிரண்டு ராகுல் அல்வால் திருபுவனை போலீஸ் நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அந்த பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலை உரிமையாளர்கள், நிர்வாகிகள், மேலாளர்கள் மற்றும் பொதுமக்களுடன் ஆலோசனை நடத்தினார்.
கூட்டத்தில், இரவு நேரத்தில் போலீசாரின் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும், சாலை விபத்துகளை தடுக்க தேவையான இடங் களில் வேகத்தடை, மின் விளக்குகள் அமைக்கவேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் தெரிவிக்கப்பட்டன.
இதற்கு பதிலளித்து பேசிய சீனியர் போலீஸ் சூப்பிரண்டு ராகுல் அல்வால், “உங்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும். தொழிற் சாலை நிர்வாகிகளிடம் மாமூல் கேட்டு ரவுடிகள் மிரட்டினாலோ, நன்கொடை கேட்டு யாரேனும் தொந்தரவு செய்தாலோ அதுபற்றி உடனே போலீசில் புகார் தெரிவிக்க வேண்டும். அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது பல தொழிற் சாலைகளில் உற்பத்தி பாதித்துள்ளதால், தொழிலாளர்களை தொழிற்சாலை நிர்வாகங்கள் பணிநீக்கம் செய்யக்கூடாது” என்றார். கூட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு ரங்கநாதன், போலீஸ் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வன், சப்-இன்ஸ்பெக்டர் தியாக ராஜன் மற்றும் போலீசார் உடனிருந்தனர்.