மத்தூர் தாலுகாவில், ஆச்சரியமான சம்பவம் சனீஸ்வர பகவானின் பாதத்தில் வந்து நின்ற காகம் பக்தர்கள் சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு

மத்தூர் தாலுகாவில் சனீஸ்வர பகவான் கோவிலுக்குள் நுழைந்து சுவாமியின் பாதத்தின் அருகே சென்று காகம் ஒன்று நின்றது. இந்த ஆச்சரியமான சம்பவத்தைப் பார்த்த பக்தர்கள் சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர்.

Update: 2019-10-20 22:50 GMT
மண்டியா,

சனிதோஷம் உள்ளவர்கள் சனீஸ்வர பகவானை வேண்டி, அவருக்கு பூஜைகள் செய்து வந்தால் அவர் சோதனைகள் கொடுப்பதை தவிர்த்து சுபம் வழங்குவார் என்பது ஐதீகம். மேலும் குரு ஸ்தலம் போன்று சனீஸ்வர பகவானுக்கும் ஏதாவது ஒரு இடத்தில்தான் தனிப்பட்ட முறையில் கோவில் அமைந்திருக்கும்.

அதுபோன்ற ஒரு கோவில்தான் மண்டியா மாவட்டம் மத்தூர் தாலுகா சாமனஹள்ளி கிராமத்தில் அமைந்துள்ளது. இக்கோவிலில் மூலவராக சனீஸ்வர பகவான் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். ஒவ்வொரு கடவுளுக்கும் ஒரு வாகனம் உண்டு. அதுபோல் சனீஸ்வர பகவானின் வாகனமாக காகம் இருந்து வருகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் சனிக்கிழமை அன்று இக்கோவிலில் பக்தர்கள் ஆச்சரியப்படும் வகையில் ஒரு விஷயம் நடந்தது. அது என்னவென்றால் சனீஸ்வர பகவானின் வாகனமாக கருதப்படும் காகம் ஒன்று திடீரென பறந்து கோவிலுக்குள் நுழைந்தது. பின்னர் அது மூலவர் சன்னதிக்குள் புகுந்து சனீஸ்வர பகவான் சிலையின் பாதத்தில் நின்று கொண்டது.

இதைப்பார்த்த அப்பகுதி மக்களும், கோவிலில் இருந்த பக்தர்களும் ஆச்சரியம் அடைந்தனர். பின்னர் அவர்கள் கோவிலுக்குள் திரண்டு வந்து சனீஸ்வர பகவானுக்கும், காகத்திற்கும் சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர். அப்போது காகம் அங்கிருந்து பறந்து செல்லாமல் சனீஸ்வர பகவானின் பாதத்தின் அருகிலேயே நின்று கொண்டிருந்தது.

பின்னர் சனீஸ்வர பகவானுக்கும், காகத்திற்கும் மகா மங்கள ஆரத்தி காட்டப்பட்டு வழிபாடு நடந்தது. அதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அதன்பின்னர் காலை முதல் மாலை வரையில் சன்னதிக்குள்ளேயே இருந்த அந்த காகம், மாலையில் பூஜைகள் அனைத்தும் முடிந்த பின்னர் கோவிலில் இருந்து பறந்து சென்றுவிட்டது.

இந்த ஆச்சரியமான சம்பவம் அப்பகுதியில் பெரும் பக்தி பரவசத்தை ஏற்படுத்தி உள்ளது. இதெல்லாம் சனீஸ்வரனின் மகிமை என்று அப்பகுதி மக்கள் பேசிக் கொள்கிறார்கள். மேலும் காகம் கோவிலுக்குள் இருப்பது தொடர்பான வீடியோக்களும், போட்டோக்களும் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகின்றன.

மேலும் செய்திகள்