25 குழந்தைகளுக்கு குறைவாக உள்ள சத்துணவு மையங்களை மூடும் திட்டத்தை கைவிட வலியுறுத்தல்
25 குழந்தைகளுக்கு குறைவாக உள்ள சத்துணவு மையங்களை மூடும் திட்டத்தை கைவிட வேண்டும் என்று சத்துணவு ஊழியர் சங்கம் வலியுறுத்தி உள்ளது.
சிவகங்கை,
சிவகங்கையில் சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட கூட்டம் தலைவர் கண்ணுச்சாமி தலைமையில் நடைபெற்றது. மாநில செயற்குழு உறுப்பினர் பூந்தேவி வரவேற்றார்.
கூட்டத்தில் அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் சுரேஷ், செயலாளர் செல்வகுமார், சத்துணவு ஊழியர் சங்க மாநில செயலாளர் மலர்விழி, மாவட்ட செயலாளர் சீமைச்சாமி, பாண்டி, சேதுராமன், ரத்தினம், பாலசுப்பிரமணி, முத்துக்குமார், கருப்பையா உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம் வருமாறு:-
36 ஆண்டுகளாக செயல்படும் சத்துணவு திட்டத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். ஓய்வு பெற்ற அனைத்து ஊழியர்களுக்கும் மாதம் ரூ.9 ஆயிரம் ஓய்வூதியமாக வழங்க வேண்டும். ஓய்வு பெறும் சத்துணவு அமைப்பாளர்களுக்கு ரூ.5 லட்சமும், சமையல் உதவியாளர்களுக்கு ரூ.3 லட்சமும் பணி கொடையாக வழங்க வேண்டும்.
25 குழந்தைகளுக்கு குறைவாக உள்ள சத்துணவு மையங்களை மூடும் திட்டத்தை கைவிட வேண்டும் சத்துணவு மையங்களுக்கு தேவையான கியாஸ் சிலிண்டர்களை அரசே வழங்க வேண்டும்.
உணவு செலவின மானியத்தை நாள் ஒன்றுக்கு ரூ.5 உயர்த்த வேண்டும் என்றும் இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற (நவம்பர்) 12-ந் தேதி மாவட்ட தலைநகரில் ஆர்ப்பாட்டமும், 26-ந் தேதி மறியல் போராட்டமும், டிசம்பர் 23-ந் தேதி முதல் காலவரையரையற்ற தொடர் வேலை நிறுத்த போராட்டமும் நடத்த முடிவு செய்யப்பட்டது. முடிவில் பொருளாளர் பானுமதி நன்றி கூறினார்.