திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரியில் அமைச்சர்கள் திடீர் ஆய்வு
திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரியில் அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, விஜயபாஸ்கர் ஆகியோர் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
திருச்செந்தூர்,
திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரியில் நேற்று காலையில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆகியோர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது அமைச்சர் விஜயபாஸ்கர் அரசு மருத்துவமனையில் உள்ள அனைத்து வார்டுகளுக்கும் சென்று நோயாளிகளிடம் அளிக்கப்படும் சிகிச்சை குறித்து கேட்டறிந்தார். பின்னர் அவர் மருத்துவர்களிடம் சிகிச்சை குறித்து ஆலோசனை வழங்கினார். அப்போது தலைமை மருத்துவர் பொன்ரவி மற்றும் டாக்டர்கள், செவிலியர்கள் உடன் இருந்தனர்.
முன்னதாக அமைச்சர்கள் 2 பேரும் திருச்செந்தூர் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். பின்னர் அமைச்சர் கடம்பூர் ராஜூ நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது;-
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக நடந்து வருகிறது. இந்த ஆண்டு நடக்க உள்ள கந்தசஷ்டி திருவிழாவை சிறப்பாக நடத்த வேண்டும் என்பதற்காக முதல்-அமைச்சரின் ஆலோசனைப்படி 2 முறை ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. இதில் பொதுமக்கள், பக்தர்கள் கலந்து கொண்டனர். அவர்களின் கருத்துகள் கேட்கப்பட்டன. கந்தசஷ்டி திருவிழாவிற்காக தற்காலிக மேற்கூரை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இது சில நாட்களில் முடிவடையும். திருவிழாவிற்கு வரும் பக்தர்களுக்கு தங்குவதற்கான வசதிகள் சிறப்பாக செய்யப்பட்டு வருகிறது. அதே போல் யாத்திரை நிவாஸ் ரூ.36 கோடியில் திருச்செந்தூர் கோவிலில் அமைக்கப்படும் என முதல்-அமைச்சர் அறிவித்தார். உயர்நீதிமன்ற வழிகாட்டுதலின்படி இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதற்கான பணி விரைவில் தொடங்கப்பட உள்ளது.
கடந்த ஆண்டை போல் தற்காலிகமாக பக்தர்கள் தங்குவதற்கான குடில்கள் அமைக்கப்பட்டு வருகிறது. மேலும் பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள், போக்குவரத்து வசதிகள் செய்யப்பட்டுள்ளது. வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள் எளிதாக சென்று வர போதுமான அளவிற்கு பேட்டரி கார்கள் இயக்கப்பட உள்ளது. சென்னை, மதுரையில் இருந்து ஆண்டுதோறும் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும். இந்த ஆண்டு கூடுதல் ரெயில்கள் இயக்க தென்னக ரெயில்வே துறைக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது. கூடுதல் ரெயில்கள் இயக்கப்பட சாத்தியக்கூறுகள் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
அதன் பின்னர் அமைச்சர் விஜயபாஸ்கர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
கந்தசஷ்டி திருவிழாவில் பல லட்சம் பக்தர்கள் கலந்து கொள்ள உள்ளார்கள். பக்தர்கள் வசதிக்காக கூடுதல் மருத்துவர்கள், செவிலியர்கள், நடமாடும் மருத்துவ குழுக்கள், நோய் தொற்று ஏற்படாமல் இருக்க உள்ளாட்சி துறையுடன் இணைந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படும். மருத்துவர்கள் நியமனம் என்பது மருத்துவ பணியாளர்கள் தேர்வு வாரியம் சார்பில் தொடர்ந்து நியமனம் செய்யப்பட்டு வருகிறார்கள். அதே போல் செவிலியர்களும் நியமனம் செய்யப்பட்டு வருகிறார்கள். குறிப்பாக இந்த வாரம் 2 ஆயிரத்து 345 செவிலியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். அவர்களுக்கு சான்றிதழ் சரிபார்க்கும் பணி முடிந்துள்ளது. கடந்த வாரம் 500 செவிலியர்கள் பச்சிளம் குழந்தைகள் பராமரிக்கும் பிரிவில் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
எம்.டி., எம்.எஸ். போன்ற மேல்படிப்பு படித்த மருத்துவர்கள் 1,100 பேர் மாவட்ட தலைமை மருத்துவமனை மற்றும் தாலுகா மருத்துவமனைகளில் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் விரைவில் பணிக்கு வருவார்கள். இதனால் அரசு மருத்துவமனைகளில் டாக்டர்கள் பற்றாக்குறை இருக்காது. தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் இருதய அடைப்பை சரிசெய்வதற்கான கேத்-லேப் அமைக்க ரூ.3 கோடியும், புற்றுநோய் கதிரியக்க சிகிச்சை வசதிக்காக ரூ.18 கோடியும் முதல்-அமைச்சர் ஒதுக்கி உள்ளார். உயர்தர சிகிச்சைக்கு அரசு தொடர்ந்து நிதி ஒதுக்கி வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.