கம்யூனிஸ்டு கட்சிகளுக்கு ரூ.25 கோடி கொடுத்த தி.மு.க. மீது நடவடிக்கை - அர்ஜூன்சம்பத் வலியுறுத்தல்
கம்யூனிஸ்டு கட்சிகளுக்கு ரூ.25 கோடி கொடுத்த தி.மு.க. கட்சி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் அர்ஜூன் சம்பத் கூறினார்.
கொடைக்கானல்,
இந்து மக்கள் கட்சியின் நிர்வாக குழு கூட்டம் கொடைக்கானலில் நடந்தது. இதற்கு நிறுவன தலைவர் அர்ஜூன் சம்பத் தலைமை தாங்கினார். மாநில இளைஞரணி செயலாளர் குமரன், நகர நிர்வாகிகள் ஆனந்த், சக்திதரன், கார்த்திக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தை தொடர்ந்து அர்ஜுன் சம்பத் நிருபர்களிடம் கூறியதாவது:-
சுற்றுலா தொழிலை நம்பியே கொடைக்கானல் பகுதி மக்களின் வாழ்வாதாரம் உள்ளது. ஆனால் மத்திய, மாநில அரசுகள் வனப்பாதுகாப்பு சட்டம், கட்டிட வரன்முறை சட்டத்தை தீவிரமாக அமல்படுத்துவதால் சுற்றுலா தொழில் பாதிப்படைந்துள்ளது. இதன் காரணமாக பல்லாயிரக்கணக்கானோர் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர். சுற்றுலா பயணிகள் அதிகம் செல்லக்கூடிய மயிலாடும்பாறை, பியர்சோழா நீர்வீழ்ச்சி மூடப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்து வருகிறது. ஒட்டு மொத்தமாக ஓட்டல்கள், கட்டிடங்கள் ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளதால் மக்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். கொடைக்கானல் மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேற்கு தொடர்ச்சி மலையில் பல இடங்களில் புலிகள் சரணாலயம் அமைக்கப்படுகின்றது. கொடைக்கானலையும் புலிகள் சரணாலயத்துடன் இணைத்திருக்கிறார்கள். இதனால் இந்த பகுதியில் விவசாயமும், சுற்றுலா தொழிலும் கடுமையாக பாதிக்கப்படும். பல ஆண்டுகளாக விவசாயம் செய்யும் நிலங்கள் வனப்பகுதியில் சேர்ப்பது நியாயமற்றது.
புலிகள் சரணாலயம் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி என அமல்படுத்தும்போது மக்கள் கருத்துகளையும், நலன்களையும் கேட்க வேண்டும். திண்டுக்கல் பகுதியில் கனிம வளம் அதிகமாக சுரண்டப்படுகிறது. ரெட்டியார்சத்திரம் பகுதியில் சட்ட விரோதமாக செயல்படும் கல்குவாரிகளில் வெடிகள் வைப்பதால் பல வீடுகளில் விரிசல் ஏற்படுகிறது.
அரசியல் பின் புலத்தால் சட்ட விரோதமாக கல்குவாரிகளை இயக்குகின்றார்கள். கச்சத்தீவை மீட்பது தான் தமிழக மீனவர்களின் பிரச்சினைக்கு ஒரே தீர்வு. பிரதமர் மோடியின் ஆட்சி அமைந்த பின்பு தான் ஒரு மீனவர் கூட சுடப்படவில்லை.
ராஜீவ்காந்தி கொலையை நியாயப்படுத்தி பேசுவது தமிழீழத்திற்கு எதிரான சதி. வரக்கூடிய சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதியிலும் ரஜினியின் அரசியல் படை இருக்கும். நாங்கள் விரும்புவது திராவிட கட்சிகளுக்கு மாற்றாக ரஜினிகாந்த் தலைமையில் ஆன்மிக அரசியல் வரவேண்டும். அவருடைய அரசியல் பிரவேசம் தமிழகத்தில் ஒரு மாற்றத்தை உருவாக்கும்.
ராஜேந்திரபாலாஜி கூறுவதை கேட்டால் இஸ்லாமியருக்கு வளர்ச்சியும், நலமும் கிடைக்கும். மு.க.ஸ்டாலின் கூறுவதை கேட்டால் காஷ்மீர் போலதான் நடக்கும். தி.மு.க.விடம் இருந்து ரூ.25 கோடி கம்யூனிஸ்டு கட்சிகள் வாங்கியிருக்கிறார்கள். இதுதொடர்பாக தி.மு.க. கட்சி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தி.மு.க., கம்யூனிஸ்டு கட்சிகளின் சின்னத்தையும், அங்கீகாரத்தையும் ரத்து செய்து, தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும். இதுகுறித்து தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைப்பதுடன், ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.