கொல்லங்கோடு அருகே, தாறுமாறாக ஓடிய கார் குளத்துக்குள் பாய்ந்தது - என்ஜினீயர் பலி
கொல்லங்கோடு அருகே உறவினர் வீட்டில் இருந்த மனைவியை அழைத்து வர சென்றபோது, தாறுமாறாக ஓடிய கார் குளத்துக்குள் பாய்ந்த விபத்தில் என்ஜினீயர் பரிதாபமாக இறந்தார்.
கொல்லங்கோடு,
குமரி மாவட்டம் குளச்சல் மாதா காலனியைச் சேர்ந்தவர் மரிய விபலிஸ்(வயது 42). இவர் வெளிநாட்டில் உள்ள ஒரு ஆயில் நிறுவனத்தில் என்ஜினீயராக பணியாற்றி வந்தார். இவருக்கு ஹெப்சி என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். மரிய விபலிஸ் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு தான் விடுமுறையில் ஊருக்கு வந்தார்.
இந்தநிலையில் ஹெப்சி குழந்தைகளுடன் கேரள மாநிலம் விழிஞ்ஞத்தில் உள்ள தனது சகோதரி வீட்டுக்கு சென்றிருந்தார். இதனால் நேற்று முன்தினம் இரவு மரிய விபலிஸ் மனைவி, குழந்தைகளை அழைத்து வர காரில் புறப்பட்டார்.
10.15 மணியளவில் கொல்லங்கோடு வெங்குளம் பகுதியில் சென்றபோது, திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலையோரத்தில் உள்ள குளத்துக்குள் பாய்ந்தது. காருக்குள் இருந்து மரிய விபலீஸ் வெளியே வர முடியவில்லை. அவரை மீட்க அந்த பகுதியை சேர்ந்தவர்கள் போராடினர்.
மேலும் இதுபற்றி கொல்லங்கோடு போலீசாருக்கும், தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசாரும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அவரை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் ½ மணிநேர போராட்டத்துக்கு பிறகு கார் கண்ணாடியை உடைத்து மயங்கிய நிலையில் இருந்த மரிய விபலிசை மீட்டனர். மேலும் மீட்பு வாகனம் மூலம் குளத்துக்குள் பாய்ந்த காரும் மீட்கப்பட்டது. உடனே, அவரை சிகிச்சைக்காக பாறசாலையில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் மரிய விபலிஸ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
பின்னர், இதுகுறித்து மரிய விபலிசின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஆஸ்பத்திரிக்கு விரைந்து வந்து பிரேத பரிசோதனைக்கு வைக்கப்பட்டு இருந்த மரிய விபலிசின் உடலை பார்த்து கதறி அழுதனர்.
இதுதொடர்பாக கொல்லங்கோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். உறவினர் வீட்டில் இருந்த மனைவியை அழைக்க சென்றபோது கார் குளத்துக்குள் பாய்ந்து என்ஜினீயர் பலியான சம்பவம் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.