திருட்டு வழக்கில் தமிழகத்தை சேர்ந்த 2 பேர் கைது; 16 வாகனங்கள் பறிமுதல்
பெங்களூருவில் திருட்டில் ஈடுபட்டு வந்ததாக தமிழகத்தை சேர்ந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 16 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
பெங்களூரு,
பெங்களூரு கோரமங்களாவில் பெங்களூரு கிழக்கு மண்டல கூடுதல் போலீஸ் கமிஷனர் முருகன் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பெங்களூருவில் திருட்டில் ஈடுபட்டு வந்த 2 பேரை உளிமாவு போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் தமிழ்நாடு மதுரை மாவட்டம் ஆனையூரில் உள்ள மல்லர் நகரை சேர்ந்த பரமேஸ்வரன் (வயது 38), சென்னையை சேர்ந்த சதாம் உசேன் (28) என்பது தெரியவந்தது. இவர்கள் 2 பேரும் பெங்களூருவுக்கு வந்து இரவு நேரத்தில் கைவரிசை காட்டியுள்ளனர். பரமேஸ்வரன் மதுரை டவுன் பி.என்.டி.நகரிலும் வசித்து வந்துள்ளார்.
அதாவது இரவு நேரத்தில் வீடுகள் முன்பு நிறுத்தப்பட்டு இருக்கும் காரின் வடிவமைப்புகளை பார்த்து சம்பவ இடத்திலேயே பரமேஸ்வரன் அந்த காரின் சாவியை 15 நிமிடங்களில் தயாரிப்பார். அதன்பிறகு அந்த சாவியை பயன்படுத்தி காரை திருடி போலி பதிவெண் பலகையை காரில் மாட்டி அதை தமிழகத்துக்கு எடுத்து சென்று விற்பனை செய்துள்ளார்.
இவர்கள் 2 பேரும் போலீசில் சிக்கியதன் மூலம் பெங்களூரு ஜெயநகர், உளிமாவு உள்ளிட்ட போலீஸ் நிலையங்கள் மற்றும் சிவமொக்கா, ராமநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் பதிவாகி இருந்த 17 திருட்டு வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு உள்ளன. கைதானவர்களிடம் இருந்து 15 கார்கள், ஒரு மோட்டார் சைக்கிள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் மொத்த மதிப்பு ரூ.1.70 கோடியாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த பேட்டியின்போது பெங்களூரு தென்கிழக்கு மண்டல துணை போலீஸ் கமிஷனர் இஷாபண்ட் மற்றும் அதிகாரிகள் இருந்தனர். அதன்பிறகு பறிமுதல் செய்யப்பட்ட கார்கள் அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.