சுகாதாரத்தை பேணாத தனியார் மருத்துவமனை நிர்வாகத்துக்கு ரூ.1 லட்சம் அபராதம் - அதிகாரிகள் நடவடிக்கை
திருவாரூரில் சுகாதாரத்தை பேணாத தனியார் மருத்துவமனை நிர்வாகத்துக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
திருவாரூர்,
திருவாரூர் நகராட்சி 2-வது வார்டு பகுதியில் டெங்கு நோய் தடுப்பு பணிகள் குறித்த ஆய்வு நேற்று நடந்தது. நகராட்சி ஆணையர் சங்கரன், மாவட்ட பூச்சியியல் அலுவலர் பழனிச்சாமி மற்றும் துப்பரவு அலுவலர் ராமச்சந்திரன் அடங்கிய குழுவினர் வீடு-வீடாக சென்று ஆய்வு செய்தனர். அப்போது ஜவுளிகாரத்தெருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் டெங்கு கொசு உற்பத்தியாகும் வகையில் சுகாதாரம் பேணப்படாமல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து மருத்துவமனை நிர்வாகத்திற்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது
இதுகுறித்து நகராட்சி ஆணையர் சங்கரன் கூறியதாவது:-
பொதுமக்கள் தங்கள் குடியிருப்பு வளாகத்தில் உள்ள தேவையற்ற பொருட்களை அகற்ற வேண்டும். சுற்றுப்புறத்தை தூய்மையாக பராமரிக்க வேண்டும். மருத்துவமனை, வர்த்தக வளாகங்கள், பள்ளிகள் வளாகம், வீடுகளில் டெங்கு கொசுக்கள் உற்பத்தியாகும் வகையில் வைத்திருந்தால் அபராதம் விதிக்கப்படும். தற்போது சுகாதாரத்தை பேணாத தனியார் மருத்துவமனைக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.