திருவண்ணாமலையில் மழை நீர் தேங்கி இருந்த தனியார் பள்ளிக்கு ரூ.25 ஆயிரம் அபராதம்
திருவண்ணாமலையில் மழைநீர் தேங்கியிருந்த பள்ளிக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து மண்டல நகராட்சி நிர்வாக இயக்குனர் நடவடிக்கை எடுத்தார்.
திருவண்ணாமலை,
வேலூர் மண்டல நகராட்சி நிர்வாக இயக்குனர் விஜயகுமார் நேற்று திருவண்ணாமலை நகராட்சி பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப்பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது அவர் நகரில் உரம் தயாரிக்கும் இடங்களான திருக்கோவிலூர் ரோடு, காந்தி நகர், செங்கம் ரோடு, அண்ணாநகர், பஸ் நிலையம், போளூர் ரோடு மற்றும் ஈசானிய மைதானம் ஆகியவற்றை பார்வையிட்டு நகராட்சி அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
மேலும் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிகளையும் அவர் ஆய்வு செய்தார். அப்போது வேட்டவலம் ரோட்டில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆட்கள் செல்ல இயலாத மொட்டைமாடியை பார்வையிட நகராட்சி பணியாளர்களுக்கு உத்தரவிட்டார். அதன்படி பணியாளர்கள் ஏணி மூலம் ஏறிப்பார்த்தபோது மொட்டை மாடியில் மழைநீர் தேங்கியிருந்தது. அதில் கொசு புழுக்கள் இருந்ததும் கண்டறியப்பட்டது.
இதையடுத்து அந்த பள்ளிக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்க மண்டல இயக்குனர் விஜயகுமார் உத்தரவிட்டார். பின்னர் அவர் கூறுகையில், முதல்முறையாக இருப்பதால் அப்பள்ளிக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மீண்டும் இந்த நிலை தொடர்ந்தால் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும். மழைக்காலம் தொடங்கியுள்ளதால் பொதுமக்களும், வர்த்தக நிறுவனங்களும், பள்ளி, கல்லூரி வளாகங்கள், பொது இடங்களில் மழைநீர் தேங்கா வண்ணம் பார்த்துக்கொள்வது கடமையாகும் என்றார். ஆய்வின்போது நகராட்சி ஆணையாளர் சுரேந்திரன், நகராட்சி துப்புரவு ஆய்வாளர்கள் ஆல்பர்ட், வினோத் கண்ணா மற்றும் கார்த்திகேயன் ஆகியோர் உடனிருந்தனர்.