மாவட்டத்தில் தீயணைப்புத்துறையின் சார்பில் விபத்தில்லா தீபாவளி கொண்டாட விழிப்புணர்வு
புதுக்கோட்டை மாவட்டத்தில் 4 இடங்களில் தீயணைப்புத்துறையின் சார்பில் விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தீயணைப்புத்துறையின் சார்பில், விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை தீயணைப்புத்துறை சார்பில் புதுக்கோட்டையில் உள்ள பிரகதாம்பாள் அரசு மேல்நிலைப்பள்ளியில் விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு மாவட்ட அலுவலர் செழியன் தலைமை தாங்கினார்.
இதில் தீயணைப்பு வீரர்கள் கலந்து கொண்டு எவ்வாறு பாதுகாப்பாக பட்டாசு வெடிக்க வேண்டும். விபத்து நடந்தால், விபத்தில் சிக்கியவர்களை எப்படி காப்பாற்ற வேண்டும் என்பது குறித்து செயல்விளக்கம் செய்து காண்பித்தனர். தொடர்ந்து மாணவர்களுக்கு விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது. இதில் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் பலர் கலந்து கொண்டனர்.
கறம்பக்குடி அனுமார் கோவில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூட்டத்திற்கு பள்ளி தலைமை ஆசிரியர் விஸ்வாசம் தலைமை தாங்கினார். இதில் கறம்பக்குடி தீயணைப்பு நிலைய அலுவலர் சிங்கமுத்து தலைமையில், வீரர்கள் கலந்து கொண்டு பட்டாசுகளை வெடிக்கும் முன் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள், அதை எச்சரிக்கையாக அப்புறப்படுத்தும் வழிமுறை, விபத்தில் இருந்து தற்காத்துக் கொள்வது எப்படி? என்பது குறித்தும் மாணவர்களிடம் விளக்கம் அளிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.
திருமயம் அருகே உள்ள நல்லூர் அரசு பள்ளியில் திருமயம் தீயணைப்பு நிலையத்தின் சார்பில், விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு நிலைய அலுவலர் பாண்டியராஜன் தலைமை தாங்கினார். இதில் பட்டாசுகள் எவ்வாறு வெடிக்க வேண்டும். தீ பற்றினால் எப்படி தடுக்க வேண்டும் என்பது குறித்து மாணவ, மாணவிகளுக்கு தீயணைப்புத்துறையினர் செயல்விளக்கம் செய்து காண்பித்தனர். பின்னர் விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது. இதில் பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.
கீரமங்கலம் தீயணைப்பு துறை சார்பில் தீபாவளியின் போது விபத்துகளை தவிர்ப்பது குறித்தும் விபத்து இல்லாமல் பட்டாசு வெடித்து தீபாவளி கொண்டாடுவது குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி கீரமங்கலம் கடைவீதியில் நடைபெற்றது. இதற்கு நிலைய அலுவலர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கி, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரத்தை வழங்கி, விபத்துகளை தவிர்ப்பது குறித்தும் விளக்கம் அளித்தார்.