கூடலூர் அருகே பரிதாபம்; பாண்டியாற்று வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட மாணவி சாவு

கூடலூர் அருகேபாண்டியாற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட மாணவி ஒருவர் பரிதாபமாக இறந்தார்.

Update: 2019-10-19 23:00 GMT
கூடலூர்,

நீலகிரி மாவட்டம்கூடலூர் அருகே உள்ள பந்தலூர் அட்டி பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவருடைய மகள் தர்‌ஷினி (வயது 19). இவர் கூடலூர் கோழிப்பாலத்தில் உள்ள அரசு கல்லூரியில் பி.ஏ. ஆங்கிலம் 2-ம் ஆண்டு படித்து வந்தார். நேற்று மாலை கல்லூரி முடிந்தவுடன் சக தோழிகளுடன் தர்‌ஷினி அப்பகுதியில் உள்ள பாண்டியாற்றுக்கு சென்றார். அப்போது தோழிகளுடன் ஆற்றின் கரையோரம் விளையாடி கொண்டிருந்தார்.

பின்னர் கால்களை கழுவுவதற்காக அவர் ஆற்றில் இறங்கியபோது எதிர்பாராதவிதமாக ஆற்றுக்குள் தவறி விழுந்தார். தற்போது பெய்த மழையின் காரணமாக ஆற்றில் அதிகஅளவு தண்ணீர் சென்றதால் அவர் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டார். இதை பார்த்த அவருடன் வந்த சக தோழிகள் காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள் என கூச்சலிட்டனர். சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் அங்கு ஓடி வந்தனர். பின்னர் வாலிபர்கள் சிலர் ஆற்றுக்குள் குதித்து தர்‌ஷினியை தேடினர். ஆனால் கிடைக்க வில்லை.

நீண்ட நேரம் தேடிய பின்னர் சிறிது தொலைவில் புளியாம்பாரா பகுதியில் மயங்கிய நிலையில் தர்‌ஷினியை வாலிபர்கள் மீட்டனர். மேலும் சம்பவ இடத்துக்கு தீயணைப்பு துறையினர் மற்றும் தேவாலா போலீசார் விரைந்து வந்தனர். தொடர்ந்து மயக்கத்தில் இருந்த மாணவி தர்‌ஷினிக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். இதனிடையே ஆம்புலன்சு வேன் வர தாமதம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து கிராம நிர்வாக அலுவலர் ராஜ்கமலின் காரில் மாணவி தர்‌ஷினியை கூடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியில் மாணவி தர்‌ஷினி பரிதாபமாக இறந்தார்.

பின்னர் பிரேத பரிசோதனைக்காக மாணவியின் உடல் கொண்டு செல்லப்பட்டது. அப்போது மாணவியின் உடலை பார்த்து பெற்றோர், உறவினர்கள் மற்றும் சக மாணவ-மாணவிகள் கதறி அழுதனர். இது பார்க்க மிகவும் பரிதாபமாக இருந்தது.

இதுகுறித்து தேவாலா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்