போலீசாருக்கான சம்பள உயர்வு விரைவில் அறிவிக்கப்படும் - மந்திரி பசவராஜ் பொம்மை பேட்டி
போலீசாருக்கான சம்பள உயர்வு பற்றி விரைவில் அறிவிக்கப்படும் என்று மந்திரி பசவராஜ் பொம்மை கூறினார்.
மைசூரு,
மைசூருவில், போலீஸ் பணிக்கு தேர்வாகி பயிற்சி பெற்றவர்களுக்கான வழியனுப்பு விழா மற்றும் பணி ஒதுக்கீடு நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் போலீஸ் மந்திரி பசவராஜ் பொம்மை கலந்து கொண்டு திறம்பட பயிற்சியை முடித்த போலீஸ்காரர்கள், சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு பதக்கங்கள், கோப்பைகள், சான்றிதழ்கள் மற்றும் பணி ஒதுக்கீட்டு ஆணைகளை வழங்கி பேசினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
போலீசார் எந்தவொரு சூழ்நிலையிலும் சட்டப்படி நேர்மையுடன் வேலை பார்த்து போலீஸ் துறைக்கு நல்ல பெயரை பெற்றுத்தர வேண்டும். தமது சொந்த காரணங்களுக்காக கோவிலில் சத்தியம் செய்வது தேவையற்றது. அரசியலுக்கு கோவில்களையும், கடவுளின் பெயர்களையும் பயன்படுத்தக்கூடாது.
எச்.விஸ்வநாத்தும், சா.ரா.மகேசும் சாமுண்டீஸ்வரி கோவிலில் அம்மன் முன்பு சத்தியம் செய்வதாகக் கூறி நாடகமாடி மக்களை ஏமாற்றி இருக்கிறார்கள். அவர்கள் இருவரும் அனுபவம் வாய்ந்த அரசியல் தலைவர்கள். அப்படி இருந்தும் எதற்காக இப்படி நடந்து கொண்டார்கள் என்று தெரியவில்லை. இவர்களது நாடகத்தை மக்கள் வேடிக்கை பார்க்கிறார்கள். அது இவர்களுக்குத்தான் பாதகமாக முடியும்.
போலீசாருக்கான சம்பள உயர்வு குறித்து விரைவில் அறிவிக்கப்படும். தற்போது அது பரிசீலனையில் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.