நூதன முறையில் மாணவ-மாணவிகளை தேர்வு எழுதவைத்த தனியார் பி.யூ. கல்லூரி
பொதுவாக பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு தேர்வு நடத்தும் போது அவர்கள் காப்பி அடிப்பதை தவிர்க்கவும், அருகில் உள்ள சக மாணவர்களை பார்த்து எழுவதை தவிர்க்கவும் பறக்கும் படையினர் சோதனை நடத்துவது வழக்கம்.
மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு எழுதும் மாணவ-மாணவிகளுக்கும் கம்மல், மூக்குத்தி, கைக்கடிகாரம் உள்ளிட்டவற்றை அணிந்து எழுத தடை விதிக்கப்பட்டுள்ளது. தேர்வு அறைகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி கண்காணிக்கும் பணியும் நடப்பது நாம் அறிவோம்.
இவ்வாறு தேர்வு எழுதும் மாணவ-மாணவிகள் காப்பி அடிப்பதையும், பக்கத்தில் இருப்பவர்களை பார்த்து எழுதுவதை தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்படுவது வாடிக்கையானது. ஆனால் கர்நாடகத்தில் தேர்வு எழுதும் மாணவ-மாணவிகள் காப்பி அடிப்பது மற்றும் பக்கத்தில் இருப்பவர்களை பார்த்து எழுதுவதை தடுக்க நூதன முறையை கையாண்ட தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
அதுபற்றி இங்கே விரிவாக காண்போம்...
கர்நாடக மாநிலம் ஹாவேரி (மாவட்டம்) டவுன் நிசர்கதாபா ரோட்டில் உள்ளது, பகத் பி.யூ. கல்லூரி. தனியாருக்கு சொந்தமான இந்த கல்லூரியில் தான் நூதன முறையில் மாணவ-மாணவிகளை தேர்வு எழுதவைத்த நிகழ்வு அரங்கேறியுள்ளது.
அது என்னவென்றால், நேற்று முன்தினம் இந்த பி.யூ. கல்லூரியில் தேர்வு நடந்தது. அப்போது மாணவ-மாணவிகள் காப்பி அடிப்பதையும், அருகில் உள்ளவர்களை பார்த்து எழுதுவதை தடுக்கவும், தேர்வு எழுதிய அனைவரின் தலையில் அட்டைப்பெட்டி அணிவிக்கப்பட்டது. அந்த வினாத்தாளை பார்த்து விடைத்தாளில் எழுதுவதற்கு வசதியாக அட்டைப்பெட்டியில் இரு துளைகள் இடப்பட்டு இருந்தது. அதன் வழியாக மாணவர்கள் வினாத்தாளை பார்த்து, விடைத்தாளில் எழுதினர்.
மாணவ-மாணவிகள் நூதன முறையில் தேர்வு எழுதிய புகைப்படத்தை யாரோ ஒருவர் செல்போனில் படம் எடுத்து, டுவிட்டர், வாட்ஸ்-அப், பேஸ்புக் (முகநூல்) உள்ளிட்ட சமூகவலைத்தளங்களில் பதிவிட்டார். தற்போது அந்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
இதுகுறித்து அந்த பி.யூ. கல்லூரி நிர்வாகம் கூறுகையில், தேர்வில் காப்பி அடிப்பதை தடுக்க இது ஒரு நூதன முயற்சியாகும். சோதனை அடிப்படையில் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இது வெற்றி பெற்றால், இந்த முறையை அனைத்து தேர்வுகளிலும் அமல்படுத்துவோம் என்று கூறியுள்ளது.