தேர்தலில் பணம் வினியோகம் கட்டுப்படுத்த தேர்தல் ஆணையமும், மத்திய அரசும் சீர்திருத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் - திருநாவுக்கரசர் எம்.பி. பேட்டி

தேர்தலில் பணம் வினியோகத்தை கட்டுப்படுத்த தேர்தல் ஆணையமும், மத்திய அரசும் சீர்திருத்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று திருநாவுக்கரசர் எம்.பி. தெரிவித்தார்.

Update: 2019-10-18 23:00 GMT
தூத்துக்குடி, 

தூத்துக்குடி விமான நிலையத்திற்கு நேற்று காங்கிரஸ் கமிட்டி செயல்தலைவர் திருநாவுக்கரசர் எம்.பி. வந்தார். அவர் அங்கு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;- நாட்டில் மூன்றில் ஒருவர் வேலை இழந்துவருகிறார்கள். வறுமை, வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து உள்ளது. இதற்கு எல்லாம் காரணம் பா.ஜனதா அரசு தான். கடந்த 6 ஆண்டுகளில் நாட்டு மக்களுக்காக பா.ஜனதா அரசு எந்த நன்மையும் செய்யவில்லை. இந்த மத்திய அரசுக்கு பயந்து அ.தி.மு.க. அரசு இயங்கி இருக்கிறது. எனவே, தமிழக மக்களுக்கு எந்த நல்லதும் செய்யாத அ.தி.மு.க.விற்கு எதிராக நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் மக்கள் வாக்களிப்பாளர்கள். இந்த இடைத்தேர்தல் மூலம் தமிழகத்தின் நலன் காக்கப்பட வேண்டும்.

தேர்தலில் பணம் பட்டுவாடா ஜனநாயக சீர்குலைவு, ஜனநாயக கேலிக்கூத்து ஆகும். நாடு முழுவதும் இந்த நிலைதான். எனவே, தேர்தல் ஆணையம் சொற்ப வாக்குகள் வாங்கும் கட்சிகள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும். ஏழ்மை நிலையில் உள்ள மக்கள் பணம் கொடுத்தால் வாங்கத்தான் செய்வார்கள். தேர்தலில் பணம் வினியோகத்தை கட்டுப்படுத்த தேர்தல் ஆணையமும், மத்திய அரசும் சீர்திருத்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இதற்கு இதுவே தீர்வாகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்