போலி சொத்து பத்திரம் மூலம் வங்கியில் ரூ.50 லட்சம் மோசடி; முன்னாள் மேலாளர் கைது
மும்பை அந்தேரி வெர்சோவா பகுதியை சேர்ந்தவர் மார்தா டிசோசா. இவரது வீட்டிற்கு தேனா வங்கியில் இருந்து நோட்டீஸ் ஒன்று வந்தது. அந்த நோட்டீசில் தாங்கள் வாங்கிய ரூ.50 லட்சம் கடனை உடனடியாக திருப்பி செலுத்தும்படி அறிவுறுத்தப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், வங்கிக்கு சென்று விசாரித்தார்.
மும்பை,
அஜய் சாஜன்(வயது40) என்பவர் மார்தா டிசோசா வீட்டின் பத்திரத்தை போலியாக தயாரித்து, அந்த சொத்து பத்திரத்தை வங்கியில் அடமானம் வைத்து ரூ.50 லட்சம் கடன் வாங்கி மோசடி செய்து இருந்தது தெரியவந்தது.
இதனால் பதறிப்போன மார்தா டிசோசா சம்பவம் குறித்து போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அஜய் சாஜனை கைது செய்தனர். விசாரணையில், அந்த பகுதியை சேர்ந்த கட்டுமான ஒப்பந்தாரர் திலிப்(52) மற்றும் தேனா வங்கியின் மேலாளராக இருந்த பிரபுல் குமார் மிஸ்ரா(55) ஆகியோர் உடந்தையுடன் இந்த மோசடி நடந்தது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் திலிப்பை கைது செய்தனர். மேலும் பிரபுல் குமார் மிஸ்ரா தற்போது ஓய்வுபெற்றுவிட்டார். அவர் தலைமறைவாகி விட்டது தெரியவந்தது. இந்தநிலையில் அம்போலி போலீசார் நேற்று முன்தினம் மிராரோட்டில் பதுங்கி இருந்த வங்கியின் முன்னாள் மேலாளர் பிரபுல் குமார் மிஸ்ராவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.