புள்ளிமானை விழுங்கிய மலைப்பாம்பு

மொரப்பூர் வனப்பகுதியில் புள்ளி மானை மலைப்பாம்பு விழுங்கியது. இதில் அந்த மான் பரிதாபமாக இறந்தது. அந்த பாம்பை பிடித்த வனத்துறையினர் அடர்ந்த வனப்பகுதிக்குள் கொண்டு சென்று விட்டனர்.

Update: 2019-10-17 22:45 GMT
அரூர்,

தர்மபுரி மாவட்டம், ெமாரப்பூர் வனச்சரகம் கொளகம்பட்டி காப்புக்காட்டில் மான், முயல் உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன. இந்த காப்புக்காட்டு பகுதியான அள்ளாளப்பட்டியானது விவசாய நிலங்களை ஒட்டி அமைந்துள்ளது.

இந்த பகுதியில் நேற்று காலை 7 மணியளவில் மான் ஒன்று அலறும் சத்தம் கேட்டது. இந்த சத்தத்தை கேட்டு அப்பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்த மூவேந்தன் அங்கு சென்று பார்த்தார்.

அப்போது சுமார் 15 அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்று, புள்ளிமான் ஒன்றை பிடித்து விழுங்கி கொண்டு இருந்தது. இதை பார்த்து அவர் அக்கம்பக்கத்தினருக்கு தகவல் தெரிவித்தார்.

மான் இறந்தது

உடனே அங்கு வந்த பொதுமக்கள் கூச்சல் போட்டும், கற்களை வீசியும், அந்த மானை மீட்க முயன்றனர். பொதுமக்களை பார்த்த அந்த மலைப்பாம்பு அங்கிருந்து காப்புக்காட்டுக்குள் உள்ள முட்புதருக்குள் சென்று விட்டது.

ரத்தக்காயத்துடன் கிடந்த அந்த மானை பொதுமக்கள் விரைந்து சென்று பார்த்தனர். அப்போது அந்த மான், மலைப்பாம்பு விழுங்கியதில் இறந்்தது தெரியவந்தது. உடனே அவர்கள் மொரப்பூர் வன அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் வனச்சரகர் கிருஷ்ணன், வனவர் வேடியப்பன் மற்றும் வனத்துறையினர் அங்கு விரைந்து வந்து அந்த மானின் உடலை கைப்பற்றி அங்கிருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர்.

வனத்துறையினர் பிடித்தனர்

பின்னர் விவசாய நிலங்கள் அருகே உள்ள இந்த காப்புக்காட்டில் நடமாடும் அந்த மலைப்பாம்பை பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் கொண்டு சென்று விட அதை தேடும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர். மாலை 6 மணியளவில் பிடிபட்ட அந்த மலைப்பாம்பு சித்தேரியில் உள்ள அடர்ந்த வனப்பகுதிக்கு கொண்டு சென்று விடப்பட்டது.

இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்