குன்னூர்-மேட்டுப்பாளையம் இடையே, நாளை மறுநாள் வரை மலைரெயில் போக்குவரத்து ரத்து
குன்னூர்-மேட்டுப்பாளையம் இடையே நாளை மறுநாள் வரை மலைரெயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டு உள்ளது.
குன்னூர்,
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு அழகிய மலைரெயில் இயக்கப்பட்டு வருகிறது. மேட்டுப்பாளையம் முதல் குன்னூர் வரை நீராவி என்ஜின் மூலமும், குன்னூர் முதல் ஊட்டி வரை டீசல் என்ஜின் மூலமும் மலைரெயில் இயக்கப்படுகிறது. இந்த மலைரெயிலில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் பயணம் செய்து இயற்கை எழில் காட்சிகளை கண்டு ரசித்து செல்கின்றனர். பருவமழை காலங்களில் மேட்டுப்பாளையம்-ஊட்டி மலைரெயில் பாதையில் மண் சரிவு, பாறைகள் உருண்டு விழுதல், மரங்கள் விழுதல் போன்ற சம்பவங்கள் நடைபெறுகிறது. இதனால் மலைரெயில் போக்குவரத்து பாதிக்கப்படுவதோடு, சுற்றுலா பயணிகளும் அவதியடைகின்றனர்.
இந்த நிலையில் கனமழை காரணமாக மேட்டுப்பாளையம்-குன்னூர் மலைரெயில் பாதையில் அடர்லி-ஹில்குரோவ் ரெயில் நிலையங்கள் இடையே 2 ராட்சத மரங்கள் வேரோடு சாய்ந்து தண்டவாளத்தில் விழுந்தன. இதுகுறித்து ரெயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் இருப்பு பாதை பொறியாளர் ஜெயராஜ் தலைமையில் 10-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் மின் வாள் மூலம் தண்டவாளத்தில் விழுந்த மரங்களை வெட்டி அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு காலை 7.10 மணிக்கு புறப்பட்டு வழக்கம்போல் 170 பயணிகளுடன் மலைரெயில் வந்து கொண்டிருந்தது. ஆனால் மலைரெயில் பாதையில் மரங்கள் விழுந்து கிடந்ததால், அடர்லி ரெயில் நிலையத்தில் மலைரெயில் நிறுத்தப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் அவதியடைந்தனர். தண்டவாளத்தில் விழுந்த மரங்களை வெட்டி அகற்றிய பிறகு காலை 10 மணிக்கு அடர்லியில் இருந்து மலைரெயில் புறப்பட்டு சென்றது. வழக்கம்போல் காலை 10.30 மணிக்கு குன்னூரை வந்தடையும் மலைரெயில், 2 மணி நேரம் தாமதமாக மதியம் 12.30 மணிக்கு வந்தடைந்தது. அதன்பின்னர் மதியம் 12.40 மணிக்கு குன்னூரில் இருந்து ஊட்டிக்கு புறப்பட்டு சென்றது.
குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் குன்னூர்-மேட்டுப்பாளையம் மலைரெயில் பாதையில் கல்லாறு பகுதியில் மண் சரிவு அபாயம் உள்ளது. இதன் காரணமாக நாளை மறுநாள்(ஞாயிற்றுக்கிழமை) வரை குன்னூர்-மேட்டுப்பாளையம் இடையே மலைரெயில் போக்குவரத்து ரத்து செய்யப்படுவதாக ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.