டெங்கு கொசு உற்பத்தி இருந்தால் பள்ளி, நிறுவனங்களின் உரிமம் ரத்து - கலெக்டர் எச்சரிக்கை
டெங்கு கொசு உற்பத்தி இருந்தால் பள்ளி, நிறுவனங்களின் உரிமம் ரத்து செய்யப்படும் என்று கலெக்டர் சண்முகசுந்தரம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அடுக்கம்பாறை,
வேலூர் தந்தை பெரியார் அரசு பாலிடெக்னிக் கல்லூரி, இந்தியன் ரெட்கிராஸ் சங்கம் இணைந்து வேலூரை அடுத்த இடையன்சாத்து ஏரிக்கரையில் 2 ஆயிரம் பனை விதை நடும் நிகழ்ச்சி நடந்தது.
பாலிடெக்னிக் முதல்வர் ஆல்பர்ட் சேவியர் தலைமை தாங்கினார். இந்தியன் ரெட்கிராஸ் சங்க செயலாளர் இந்திரநாத், கல்லூரி இயந்திரவியல் துறைத்தலைவர் சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். என்.எஸ்.எஸ். திட்ட அலுவலர் ராஜேஷ் வரவேற்றார். இதில் சிறப்பு அழைப்பாளராக கலெக்டர் சண்முகசுந்தரம் கலந்துகொண்டு, பனை விதை நடும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பேசுகையில், வேலூர் மாவட்டத்தில் வெயிலும் அதிகம், தண்ணீர் பற்றாக்குறையும் அதிகம். எனவே, மரக்கன்றுகளை அதிக அளவில் நட வேண்டும். இதன் மூலம் வெயிலின் அளவை படிப்படியாக குறைக்க முடியும். இந்தியாவில் அதிக ஏரிகள் கொண்ட மாநிலங்களில் தமிழகமும் ஒன்று என்றார்.
அதைத் தொடர்ந்து கலெக்டர் சண்முகசுந்தரம் நிருபர்களிடம் கூறியதாவது:-
சதுப்பேரியில் கடந்த 50 ஆண்டுகளாக குப்பை கொட்டப்பட்டு வந்தது. தற்போது குப்பைகளை கொட்டுவது தடுக்கப்பட்டு, பயோகேஸ் மூலம் உரம் தயாரிக்கும் பணிகள் நடந்து வருகிறது. இது தவிர இந்த குப்பைகள் தனியார் சிமெண்டு ஆலைகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது. முழுமையாக குப்பைகள் அகற்றிய பிறகு சதுப்பேரியை தூர்வாரும் பணிகள் தொடங்க முடியும். தற்போது தூர்வாரினாலும், அங்குள்ள குப்பைகள் மற்றும் நச்சு தன்மை ஏரியில் பரவிவிடும்.
வேலூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலை தடுக்க அனைத்து தனியார் பள்ளிகள் மற்றும் வணிக வளாகங்களை தூய்மையாக வைத்துக்கொள்ள அறிவுறுத்தி வருகிறோம். டெங்கு கொசுப்புழு உற்பத்தி இருந்தால் முதலில் ரூ.10 ஆயிரம், 2-வது முறை ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது. இது தொடர்ந்தால் சம்பந்தப்பட்ட பள்ளி மற்றும் நிறுவனங்களின் உரிமம் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது வேலூர் தாசில்தார் சரவணமுத்து, துணை தாசில்தார் முரளிதரன், பென்னாத்தூர் வருவாய் ஆய்வாளர் ரமேஷ், கிராம நிர்வாக அலுவலர் லட்சுமிகாந்தம் உள்பட பலர் உடனிருந்தனர்.