போடியில், புழுக்களுடன் காணப்பட்ட ரே‌‌ஷன் அரிசியை சாலையில் கொட்டி பொதுமக்கள் மறியல்

போடியில் புழுக்களுடன் காணப்பட்ட ரே‌‌ஷன் அரிசியை பொதுமக்கள் சாலையில் கொட்டி மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2019-10-17 23:00 GMT
போடி,

போடி நகராட்சி 1-வது வார்டு புதூரில் உள்ள ரே‌‌ஷன் கடையில் நேற்று விலையில்லா அரிசி வழங்கப்பட்டது. அந்த அரிசி உபயோகப்படுத்த முடியாத அளவிற்கு தரமில்லாமலும், புழுக்களுடனும் காணப்பட்டது.

இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் ரே‌‌ஷன் கடை ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது ஊழியர்கள், எங்களுக்கு வருகிற அரிசியைதான் நாங்கள் வினியோகம் செய்கிறோம் என தெரிவித்துள்ளனர்.

இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் தாங்கள் வாங்கிய விலையில்லா அரிசியுடன் போடியில் உள்ள மூணாறு தேசிய நெடுஞ்சாலைக்கு வந்தனர். அங்கு தேவர் சிலை அருகே ரே‌‌ஷன் அரிசியை சாலையில் கொட்டி மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதனையடுத்து போடி நகர் போலீசார் அங்கு விரைந்து வந்து பொதுமக்களை சமாதானப்படுத்தி அங்கிருந்து கலைய செய்தனர். மேலும் ரே‌‌ஷன் கடையிலும் விலையில்லா அரிசி வினியோகம் செய்வது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற் படுத்தியது.

மேலும் செய்திகள்