சீமான் இருக்க வேண்டிய இடம் சிறைச்சாலை - பா.ஜ.க. தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் பேட்டி
சீமான் இருக்க வேண்டிய இடம் சிறைச்சாலை என பா.ஜ.க.தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் கூறினார்.
குடியாத்தம்,
பாரதீய ஜனதா கட்சி சார்பில் மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாளையொட்டி குடியாத்தத்தில் இருந்து கே.வி.குப்பம் வரை பாத யாத்திரை நிகழ்ச்சி நடைபெற்றது. குடியாத்தம் நெல்லூர்பேட்டை காந்திசிலை அருகில் நடந்த பாத யாத்திரைக்கு பா.ஜ.க. நகர தலைவர் ஸ்ரீகாந்த் தலைமை தாங்கினார். மாவட்ட பொதுச்செயலாளர் வாசுதேவன், மாவட்ட துணை தலைவர் தண்டாயுதபாணி, மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் மோகன், மாவட்ட செயலாளர் சிவக்குமார், மாவட்ட இளைஞரணி செயலாளர் லோகேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் சிறப்பு அழைப்பாளராக கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன், மாவட்ட தலைவர் கொ.வெங்கடேசன், மாநில மகளிரணி செயலாளர் கார்த்தியாயினி உள்பட பலர் கலந்து கொண்டு பாத யாத்திரை சென்றனர். குடியாத்தம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
முன்னதாக இல.கணேசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழ்நாட்டில் மாமல்லபுரத்தில் இந்திய -சீன பேச்சுவார்த்தைக்கான இடத்தை தேர்வு செய்தவர் பிரதமர் மோடி ஆவார். மாமல்லபுரத்திற்கும், சீன கலாசாரத்திற்கும் நிறைய தொடர்பு உள்ளது. அதனால்தான் அங்கு இந்திய - சீன தவலைர்கள் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தைக்கு பின்னர் மாமல்லபுரத்திற்கு மக்களின் வருகை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
அன்னிய நாட்டு சக்தியால் முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்டார். அதற்காக நீதிமன்றம் விசாரணை நடத்தி குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டணை வழங்கி தற்போது ஆயுள் தண்டணையாக குறைத்துள்ளது. இந்த நிலையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், ராஜீவ்காந்தியை கொன்றது நாங்கள்தான் என கூறுகிறார். அவர் இந்தியாவில் வாழ்வதற்கு தகுதியற்றவர். அவர் இருக்க வேண்டிய இடம் சிறைச்சாலைதான். நாடு முழுவதும் காலியாக உள்ள பா.ஜ.க. மாநில தலைவர்களுக்கான தேர்தல் டிசம்பர் மாதம் நடைபெறுகிறது. அப்போது தமிழகத்திற்கான தலைவர் தேர்வு செய்யப்படுவார்.
இவ்வாறு அவர் கூறினார்.