வேறு பகுதிகளை சேர்ந்தவர்களுக்கு நிலம் ஒதுக்க எதிர்ப்பு; ஊராட்சி மன்ற அலுவலகம் முற்றுகை

வேறு பகுதிகளை சேர்ந்தவர்களுக்கு நிலம் ஒதுக்குவதை கண்டித்து பெரிஞ்சேரி கிராம பொதுமக்கள் ஊராட்சிமன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

Update: 2019-10-16 23:00 GMT
ஊத்துக்கோட்டை,

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள நீர் நிலைகளை ஆக்கிரமித்து கட்டிய வீடுகள், கடைகள், விவசாய பண்ணைகளை உடனடியாக அகற்ற வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் தாசில்தார்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

இதனை தொடர்ந்து வருவாய்த்துறை அதிகாரிகள் நீர் நிலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றி வருகின்றனர். ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடு இழந்தவர்கள் தங்களுக்கு வீடு கட்டி கொள்ள மாற்று இடம் ஒதுக்குமாறு வலியுறுத்தி வருகின்றனர்.

இவர்களுக்கு அந்த பகுதிகளில் உள்ள அரசு புறம்போக்கு நிலங்களை வருவாய்த்துறை அதிகாரிகள் ஒதுக்கி வருகிறார்கள்.

ஊத்துக்கோட்டை அருகே உள்ள பெரிஞ்சேரி ஊராட்சியில் 3½ ஏக்கர் நிலப்பரப்பில் அரசு நத்தம் புறம்போக்கு நிலம் உள்ளது. இந்த நிலத்தை ஊத்துக்கோட்டை தாலுகாவில் பல்வேறு பகுதியில் உள்ள நீர் நிலைகளை ஆக்கிரமித்து வீடுகள் கட்டி கொண்டவர்களுக்கு ஒதுக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

பெரிஞ்சேரி சுற்று வட்டார பகுதிகளில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி இனத்தவர் பலர் குடிசைகள் அமைத்து வசித்து வருகின்றனர். இவர்கள் வீட்டுமனை பட்டா கோரி ஊத்துக்கோட்டை தாலுகா அலுவலகம், எல்லாபுரம் மற்றும் பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் கோரிக்கை மனுக்கள் அளித்துள்ளனர்.

ஆனால் அதிகாரிகள், இது வரை எந்த வித நடவடிக்கை எடுக்க வில்லை என்று கூறப்படுகிறது.

இப்படி தங்கள் கிராம சுற்றுப்புறங்களில் பலர் வீடுமனை பட்டா இல்லாமல் அவதிபட்டு வருகின்றனர். இந்த நிலையில் இதர பகுதிகளை சேர்ந்தவர்களுக்கு நிலம் ஒதுக்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதற்கு பெரிஞ்சேரி கிராமமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

மேலும் கிராமத்தில் சமுதாய கூடம் இல்லை. திருவள்ளூர்-ஊத்துக்கோட்டை சாலையையொட்டி ஊராட்சி தொடக்கப்பள்ளி, அங்கன்வாடி மையம் உள்ளது. சாலை விரிவாக்க பணிகள் மேற்கொண்டால் பள்ளி கட்டிடம் மற்றும் அங்கன்வாடி மையம் இடிக்க வேண்டி இருக்கும்.

அப்படி நடைபெற்றால் கிராமத்தில் உள்ள 3½ ஏக்கர் அரசு நத்தம் புறம்போக்கு நிலத்தில் பள்ளி, அங்கன்வாடி மையம், சமுதாய கூடமும் கட்டலாம். ஆகையால் வேறு பகுதிகளை சேந்தவர்களுக்கு தங்கள் கிராமத்தில் நிலம் ஒதுக்க கூடாது என்று வலியுறுத்தி வருகின்றனர்.

கடந்த 2-ந் தேதி நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் கிராமமக்கள் தீர்மாணம் நிறைவேற்றி நகல்களை முதல்-அமைச்சர் தனி பிரிவு மற்றும் மாவட்ட நிர்வாகத்துக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில் பெரிஞ்சேரி கிராமத்தில் உள்ள 3½ ஏக்கர் நிலப்பரப்பில் உள்ள அரசு நத்தம் புறம்போக்கு நிலத்தில் உள்ள முள் புதர்கள்களை அகற்ற ஊத்துக்கோட்டை தாசில்தார் இளவரசி, துணை தாசில்தார் வாசுதேவன், இன்ஸ்பெக்டர் மதியரசன், சப்-இன்ஸ்பெக்டர் அழகேசன், கிராம நிர்வாக அலுவலர் மகாராஜன் ஆகியோர் தலைமயில் அதிகாரிகள் நேற்று பொக்லைன் எந்திரங்களுடன் சென்றனர்.

பிற பகுதிகளை சேர்ந்தவர்களுக்கு தங்கள் கிராமத்தில் நிலம் ஒதுக்க கூடாது என்று வலியுறுத்தி கிராம பொதுமக்கள் ஊராட்சிமன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

தாசில்தார் இளவரசி மற்றும் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் கிராமமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். பெரிஞ்சேரி கிராம சுற்றுவட்டார பகுதி மக்களுக்கு போக மீதி உள்ள இடத்தை பிற பகுதி மக்களுக்கு ஒதுக்குவோம் என்று உறுதி அளித்தனர்.

அதன்பேரில் கிராமமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். பின்னர் பொக் லைன் எந்திரங் களை கொண்டு முள்புதர் களை அகற்றும் பணி தொடங்கியது.

மேலும் செய்திகள்