நாசிக் மேற்கு தொகுதி பா.ஜனதாவுக்கு ஒதுக்கப்பட்டதற்கு எதிர்ப்பு: சிவசேனா கவுன்சிலர்கள் 36 பேர் ராஜினாமா
நாசிக் மேற்கு தொகுதி பா.ஜனதாவுக்கு ஒதுக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாசிக்கில் சிவசேனா கவுன்சிலர்கள் 36 பேர் ராஜினாமா செய்துள்ளனர்.
மும்பை,
மராட்டிய சட்டசபை தேர் தலில் பா.ஜனதா- சிவசேனா கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. இதில் கல்யாண் கிழக்கு தொகுதியில் பா.ஜனதா சார்பில் கண்பத் கெய்க்வாட் போட்டியிடுகிறார். இந்த தொகுதி பா.ஜனதாவுக்கு கொடுக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து சமீபத்தில் கல்யாண்- டோம்பிவிலி மாநகராட்சியை சேர்ந்த சுமார் 30 சிவசேனா கவுன்சிலர்கள் மற்றும் பல நிர்வாகிகள் கட்சியில் இருந்து விலகினர்.
அவர்கள் தங்களது ராஜினாமா கடிதத்தை உத்தவ் தாக்கரேக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவர்கள் சிவசேனா போட்டி வேட்பாளர் தனஞ்செய் போத்ரேவுக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதேபோல நாசிக் மேற்கு தொகுதி பா.ஜனதாவுக்கு ஒதுக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிவசேனாவை சேர்ந்த 36 கவுன்சிலர்கள் மற்றும் 350-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கட்சியில் இருந்து விலகி உள்ளனர். இதில் நாசிக் மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர் விலாஸ் ஷிண்டே உள்பட 36 கவுன்சிலர்கள் தங்களது ராஜினாமா கடிதத்தை உத்தவ் தாக்கரேக்கு அனுப்பி உள்ளனர்.
தேர்தலுக்கு சில நாட்களே உள்ளநிலையில் சிவசேனா கவுன்சிலர்கள் கூண்டோடு கட்சியில் இருந்து விலகி இருப்பது நாசிக்கில் பா.ஜனதா- சிவசேனா கூட்டணிக்கு மிகுந்த பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.