மும்பையில் மழை காலம் முடிந்தது; வெயிலின் தாக்கம் அதிகரிப்பு

மும்பையில் மழை காலம் முடிந்து, கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து உள்ளது.

Update: 2019-10-15 23:21 GMT
மும்பை, 

மும்பையில் கடந்த ஜூன் மாதம் முதல் பருவ மழை தொடங்கியது. இதில், ஜூன் மாதக்கடைசியில் பருவ மழை தீவிரம் அடைந்தது. ஜூலை, ஆகஸ்டு, செப்டம்பர் மாதங்களில் பல நாட்களில் பலத்த மழை காரணமாக மும்பை வெள்ளத்தில் தத்தளித்தது.

கடந்த ஜூன் முதல் செப்டம்பர் வரை மும்பையில் 366.96 செ.மீ. மழை பதிவாகி இருந்தது. வழக்கமாக மும்பையில் செப்டம்பர் மாதத்துடன் மழைக்காலம் முடியும். ஆனால் இந்த ஆண்டு கடந்த 10-ந் தேதி வரை மழை நீடித்தது. இந்த மாதம் மும்பையில் 2.5 செ.மீ. மழை பதிவாகி இருந்தது. நேற்றுமுன்தினம் மழைக்காலம் மும்பையில் முடிந்துவிட்டதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.

இந்தநிலையில் நேற்றுமுன்தினம் முதலே மும்பையில் வெயிலின் தாக்கம் அதிகமாகி உள்ளது. மும்பை புறநகரில் 35.9 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகி இருந்தது. இது வழக்கத்தைவிட 1.6 டிகிரி செல்சியஸ் அதிகம் ஆகும்.

மும்பை நகரிலும் வெப்பநிலை வழக்கத்தைவிட அதிகமாகவே இருந்தது. நேற்று மும்பையில் 36 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை நிலவியது. அடுத்த சில நாட்களுக்கு மும்பையில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.

மேலும் செய்திகள்