மதுரையில் பயங்கரம்: கள்ளக்காதலனை ஏவி கணவரை கொன்ற பெண்

மதுரையில் கள்ளக்காதலனை ஏவி கணவரை கொடூரமாக கொன்ற பெண் குறித்து பரபரப்பு தகவல்கள் விசாரணையில் தெரியவந்துள்ளன.

Update: 2019-10-16 00:00 GMT
மதுரை,

மதுரை டி.பி. மெயின் ரோடு, சிட்டாலாட்சி நகரை சேர்ந்தவர் ரஞ்சித்குமார் (வயது 44), ரியல் எஸ்டேட் தொழில் அதிபர். இவருடைய மனைவி சுபா. இவர்களுக்கு 3 பிள்ளைகள் உள்ளனர். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு சுபா தனது கணவரை விட்டு பிரிந்து தனியாக வசித்து வருகிறார்.

இதற்கிடையே ரஞ்சித்குமார் தன்னுடைய உறவுக்கார பெண்ணுடன் குடித்தனம் நடத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த சுபா, அடிக்கடி கணவருடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு வீட்டின் முன்பு ரஞ்சித்குமார் சிலருடன் பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது ஆட்டோவில் 4 பேர் ஆயுதங்களுடன் அங்கு வந்தனர். அவர்களை பார்த்ததும் ரஞ்சித்குமார் அங்கிருந்து தப்பி ஓட முயற்சித்துள்ளார். ஆனால் அந்த 4 பேரும் அவரை சுற்றி வளைத்து ஆபாசமாக பேசியதுடன், அவரது மர்ம உறுப்பை துண்டித்தும், கத்தியால் குத்திவிட்டும் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

பலத்த காயத்துடன் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த ரஞ்சித்குமாரை, அந்த பகுதியை சேர்ந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மதுரை பெரிய ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

இந்த சம்பவம் குறித்து அறிந்ததும் எஸ்.எஸ்.காலனி போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில், கணவரை விட்டு பிரிந்து சென்ற சுபாவிற்கு, ஆட்டோ டிரைவரான பிரகாஷ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டதாக தெரியவருகிறது.

சுபா தனது கள்ளக்காதலனிடம், தன்னை கைவிட்ட கணவரின் மர்ம உறுப்பை அறுத்து கொல்ல வேண்டும் என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதை தொடர்ந்து ஆட்டோ டிரைவர் பிரகாஷ், பாப்ளி உள்பட 4 பேர் நேற்று முன்தினம் வீட்டுக்கு தேடிச் சென்று ரஞ்சித்குமாரிடம் தகராறு செய்து அவரின் மர்மஉறுப்பை அறுத்தும், ஆயுதங்களால் தாக்கி விட்டும் தப்பியது தெரியவந்தது.

இந்த கொலைக்கு சுபாதான் மூலக்காரணம் என விசாரணையில் தெரியவந்ததால், அவரையும், கள்ளக்காதலன் பிரகாஷ் உள்பட 4 பேரையும் போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்