தற்காலிகமாக இயக்கப்பட்ட சேலம்-கரூர் பயணிகள் ரெயில் நிரந்தர ரெயிலாக மாற்றம்
தற்காலிகமாக இயக்கப்பட்ட சேலம்-கரூர் பயணிகள் ரெயில் நிரந்தர ரெயிலாக மாற்றப்பட்டது. இந்த ரெயிலை காணொலி காட்சி மூலம் மத்திய மந்திரி பியூஷ் கோயல் தொடங்கி வைத்தார்.
சூரமங்கலம்,
சேலம்-நாமக்கல்-கரூர் இடையே 85 கிலோ மீட்டர் தூரத்திற்கு புதிய அகல ரெயில்பாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய வழித்தடத்தில் சேலம்-கரூர் பயணிகள் ரெயில் இரு மார்க்கத்திலும் இயக்கப்பட்டு வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு கரூர்-திருச்சி பயணிகள் ரெயில் சேலம் வரை நீட்டிக்கப்பட்டு கரூர்-சேலம் பயணிகள் ரெயிலாக தற்காலிகமாக இயக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் ரெயில் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு தற்காலிகமாக இயக்கப்பட்ட சேலம்-கரூர் பயணிகள் ரெயில் நிரந்தர சேவையாக மாற்ற நட வடிக்கை எடுக்கப்பட்டது.
இதன்படி சேலம்-கரூர் பயணிகள் ரெயில் சேவை தொடக்க விழா சேலம் ஜங்சன் ரெயில் நிலையத்தில் நேற்று நடைபெற்றது. அப்போது சேலம்-கரூர் பயணிகள் ரெயில் சேவையை புதுடெல்லியில் இருந்து காணொலி காட்சி மூலம் மத்திய ரெயில்வே மந்திரி பியூஷ் கோயல் தொடங்கி வைத்தார்.
அதைத்தொடர்ந்து சேலம் ரெயில்வே கோட்ட மேலாளர் சுப்பாராவ், எஸ்.ஆர்.பார்த்திபன் எம்.பி., கோட்ட முதுநிலை வணிக மேலாளர் ஹரிகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் சேலம்-கரூர் பயணிகள் ரெயில் சேவை கொடி யசைத்து தொடங்கி வைக்கப்பட்டது.
இந்த விழாவில் ரெயில்வே ஆலோசனை குழு உறுப்பினர் கோபிநாத், நிலைய மேலாளர் கவுரிசங்கர், நிலைய வணிக மேலாளர் விக்ரம், உதவி நிலைய மேலாளர் அய்யாவு உள்பட பலர் கலந்து கொண்டர்.
சேலம்-கரூர்் பயணிகள் ரெயில்(வண்டி எண் 76801) சேலத்தில் இருந்து மதியம் 1.40 மணிக்கு புறப்பட்டு மாலை 3.25 மணிக்கு கரூருக்கு சென்றடைகிறது. கரூர்-சேலம் பயணிகள் ரெயில்(வண்டி எண் 76802) கரூரில் இருந்து காலை 11.40 மணிக்கு புறப்பட்டு சேலத்திற்கு மதியம் 1.25 மணிக்கு வந்தடைகிறது. ஞாயிற்றுக் கிழமை தவிர மற்ற நாட்களில் இந்த ரெயில்கள் இயக்கப் படும்.
முன்னதாக சேலம் ரெயில்வே கோட்ட மேலாளர் சுப்பாராவ் நிருபர்களிடம் கூறும் போது, ‘சேலம் ரெயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட கோவை-பெங்களூருவுக்கும், கோவை-மதுரைக்கும் புதிய ரெயில்கள் இயக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோவை முதல் ஹவுரா வரை ஒவ்வொரு வியாழக்கிழமையும் சிறப்பு ரெயில் இயக்கப்படும். சேலம் ரெயில் நிலையம் புதுப்பிக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது’ என்றார்.
இதே போல பழனி-கோவை, பொள்ளாச்சி-கோவை ஆகிய தற்காலிக பயணிகள் ரெயில் சேவையும், தற்போது நிரந்தர ரெயில் சேவையாக மாற்றப்பட்டுள்ளது.