39 ஆண்டுகளுக்கு முன்பு தத்து கொடுக்கப்பட்டவர் கண்டுபிடிப்பு: டென்மார்க்கில் வசித்த மகனுடன் வீடியோ மூலம் உரையாடிய தாய்

39 ஆண்டுகளுக்கு முன்பு தத்து கொடுக்கப்பட்டு டென்மார்க்கில் வசித்து வந்த மகனுடன் அவரது தாய் வீடியோ மூலம் உரையாடினார்.

Update: 2019-10-15 23:15 GMT
திருச்சி,

தஞ்சை மாவட்டம் அம்மாபேட்டை சின்னக்கடைத்தெருவை சேர்ந்தவர் தனலெட்சுமி. இவரது கணவர் கலியமூர்த்தி. இவர்களுக்கு டேனியேல் ராஜன், டேவிட் சாந்தகுமார் ஆகிய 2 குழந்தைகள் இருந்தனர். கடந்த 1980-ம் ஆண்டு இந்த குழந்தைகளுக்கு 1½ வயது இருந்தபோது, கலியமூர்த்தி தனது 2 மகன்களையும் சென்னையில் வைத்து டென்மார்க்கை சேர்ந்த வெவ்வேறு தம்பதியினருக்கு தத்து கொடுத்தார். டென்மார்க்கில் வளர்ந்து வந்த டேவிட்சாந்தகுமார் அங்கு பல்வேறு பிரச்சினைகளை சந்தித்தார். அங்குள்ளவர்களின் நிறமும், டேவிட் சாந்தகுமாரின் நிறமும் வெவ்வேறாக இருந்தது. இதனால் அவரை தமிழகத்தில் இருந்து தத்தெடுத்து வந்து வளர்த்து வருவதை டேவிட்சாந்தகுமாரிடம் டென்மார்க் தம்பதியினர் கூறினர்.

இதைக்கேட்ட அவருக்கு தனது பெற்றோரை பார்க்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. இதனால் அவர் தனது உண்மையான பெற்றோர் யார்? எங்கு இருக்கிறார்கள் என்ற விவரங்களையும், பழைய புகைப்படங்களையும் சேகரித்தார். அதன்மூலம் 39 ஆண்டுகளுக்கு முன்பு அவரை தஞ்சையில் இருந்து தத்தெடுத்து வளர்த்தது தெரியவந்தது. இதையடுத்து பெற்றோரை பார்க்கும் ஆவலுடன் கடந்த 2013-ம் ஆண்டு அவர் டென்மார்க்கில் இருந்து தமிழகம் வந்து தஞ்சைக்கு சென்றார். அங்கு வீதி, வீதியாக பெற்றோரை தேடி அலைந்தார். ஆனால் கலியமூர்த்தி-தனலெட்சுமி என்ற தம்பதியினரை அவரால் கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து அவர் ஏமாற்றத்துடன் டென்மார்க்கிற்கு திரும்பி சென்றார்.

கடந்த 2017-ம் ஆண்டு டென்மார்க்கில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் மராட்டிய மாநிலம் புனேவை சேர்ந்த குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பை சேர்ந்த இயக்குனர் அருண் என்பவரை சந்தித்தார். அப்போது அவரிடம், தான் தமிழகத்தில் இருந்து டென்மார்க்கிற்கு தத்து கொடுக்கப்பட்டதையும், தனது பெற்றோரை பார்க்க ஆவலாக இருப்பதாகவும், தனக்கு உதவும்படியும் கூறினார். இதையடுத்து டேவிட் சாந்தகுமார் கடந்த மாதம் 24-ந் தேதி குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பின் இயக்குனர் அருண், வக்கீல் அஞ்சலிபவார் ஆகியோருடன் விமானம் மூலம் தமிழகம் வந்தார்.

திருச்சி விமானநிலையத்தில் வந்து இறங்கிய அவர்கள் அங்கிருந்து காரில் தஞ்சைக்கு புறப்பட்டனர். இதுகுறித்து தினத்தந்தியில் “பெற்றோரை தேடி டென்மார்க்கில் இருந்து தமிழகம் வந்த மகன்“ என்ற செய்தி படத்துடன் பிரசுரிக்கப்பட்டு இருந்தது. கடந்த மாதம் 24-ந் தேதி முதல் 29-ந் தேதி வரை 4 நாட்கள் தஞ்சையில் தங்கி இருந்து டேவிட் சாந்தகுமார் பெற்றோரை தேடினார். அப்போதும் அவரால் கண்டு பிடிக்கமுடியவில்லை. இதையடுத்து டேவிட் சாந்தகுமார் தான் குழந்தையாக இருந்தபோது, தாயின் மடியில் அமர்ந்து எடுத்து கொண்ட புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பதிவிட்டார்.

என்றைக்காவது ஒருநாள் நிச்சயம் பெற்றோரை கண்டுபிடித்து விடுவேன் என்ற நம்பிக்கையுடன் மீண்டும் டென்மார்க்கிற்கு புறப்பட்டு சென்றார். இந்தநிலையில் சில நாட்களுக்கு முன்பு டேவிட்சாந்தகுமார் பெற்றோரை தேடி தமிழகம் வந்தது குறித்தும், அவர் சமூக வலைத்தளத்தில் தாயுடன் பதிவிட்ட புகைப்படத்தையும் கண்ட தனலெட்சுமி குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்தனர். உடனடியாக முகநூல், இன்ஸ்டாகிராம் பக்கங்களில் டேவிட்சாந்தகுமார் குறித்த தகவல்களை தேடி அலசினர். டேவிட்சாந்தகுமாருக்கு வக்கீல் அஞ்சலிபவார் உதவி புரிந்து வருவது தெரியவந்தது. உடனடியாக அவரை தொடர்பு கொண்டு இது பற்றிய விவரத்தையும், புகைப்பட ஆதாரங்களையும் காட்டினர்.

அதன்பிறகு வக்கீல் அஞ்சலிபவார் டென்மார்க்கில் இருந்த டேவிட்சாந்தகுமாரை போன் மூலம் தொடர்பு கொண்டு அவரது பெற்றோரை கண்டு பிடித்த விவரத்தையும், அவர்கள் தஞ்சையில் இருந்து இடம்பெயர்ந்து சென்னையில் திருமுல்லைவாயில் பகுதியில் வசித்து வருவதையும் கூறினார். இதைக்கேட்டு மகிழ்ச்சி அடைந்த டேவிட் சாந்தகுமார் தனது தாயுடன் பேச ஏற்பாடு செய்யுமாறு கூறினார். வக்கீல் அஞ்சலிபவார் உதவியுடன் டேவிட்சாந்தகுமார் டென்மார்க்கில் இருந்து தனது தாய் தனலெட்சுமியிடம் ‘வீடியோ கால்’ மூலம் உரையாடினார். அப்போது இருவரும் உணர்ச்சி பெருக்குடன் மகிழ்ச்சியை பரிமாறி கொண்டனர்.

இதுகுறித்து தனலெட்சுமியின் சகோதரர் லட்சுமிபதி கூறுகையில், “டேவிட்சாந்தகுமார் தத்து கொடுக்கப்பட்டு 39 ஆண்டுகளுக்கு பிறகு தாயிடம் பேசியதால் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தார். அவருக்கு எப்படியும் தாயாரை கண்டு பிடித்துவிடலாம் என்ற நம்பிக்கை இருந்தது. அதனால் தான் மனம் தளராமல் தேடி வந்தார். அவரிடம் பேசியது எங்கள் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் சந்தோஷமாக உள்ளது. கடந்த மாதம் தான் அவர் டென்மார்க்கில் இருந்து தமிழகம் வந்துவிட்டு சென்றுள்ளார். அதனால் அவரால் உடனே மீண்டும் வரமுடியாது. ஆகவே விரைவில் தமிழகம் வருவதாக கூறி இருக்கிறார். அவரை சந்திக்க குடும்பத்தினர் அனைவரும் ஆவலாக இருக்கிறோம்“ என்றார்.

மேலும் செய்திகள்