9,673 வாக்குச்சாவடிகள் ‘வெப்கேமரா' மூலம் கண்காணிக்கப்படும் ; தேர்தல் ஆணைய அதிகாரி தகவல்
மராட்டிய சட்டசபை தேர்தலில் 9,673 வாக்குச்சாவடிகள் வெப்கேமரா மூலம் கண்காணிக்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.
மும்பை,
288 தொகுதிகளை கொண்ட மராட்டிய சட்டசபைக்கு வருகிற 21-ந் தேதி தேர்தல் நடக்கிறது. வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் தீவிரமாக செய்து வருகிறது. மாநிலம் முழுவதும் 96 ஆயிரத்து 661 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படுகின்றன.
வாக்குப்பதிவுக்கு 1 லட்சத்து 79 ஆயிரத்து 895 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களும், 1 லட்சத்து 26 ஆயிரத்து 505 கன்ட்ரோல் யூனிட்களும் பயன்படுத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டு உள்ளது.
மேலும் முதல் முறையாக மராட்டிய சட்டசபை தேர்தலில் யாருக்கு வாக்கு அளித்தோம் என்பதை உறுதிப்படுத்தும் வி.வி.பாட் ஒப்புகை சீட்டு எந்திரங்களும் பயன்படுத்தப்பட உள்ளன.
ஓட்டுப்பதிவு வெளிப்படை தன்மையுடன் நடப்பதற்காக 1 லட்சத்து 35 ஆயிரத்து 21 வி.வி.பாட் எந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.
வாக்குப்பதிவின் போது முறைகேடுகள் மற்றும் அசம்பாவித சம்பவங்களை தடுக்கவும் பதற்றமானவை என கண்டறியப்பட்ட வாக்குச்சாவடிகள் உள்பட 9 ஆயிரத்து 673 வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு ‘வெப் கேமரா' மூலம் கண்காணிக்கப்பட உள்ளது.
இந்த தகவலை தேர்தல் ஆணைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.