சம்பள விகிதத்தை மாற்றி அமைக்க கோரி எச்.ஏ.எல். நிறுவன ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்
சம்பள விகிதத்தை மாற்றி அமைக்க கோரி எச்.ஏ.எல். நிறுவன ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை தொடங்கினர். இதனால் போர் விமான உற்பத்தி பணிகள் முடங்கின.
பெங்களூரு,
சம்பள விகிதத்தை மாற்றி அமைக்க ேவண்டும், அதை முன்தேதியிட்டு அதாவது 2017-ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதி முதல் அமல்படுத்த வேண்டும் என்று கோரி அகில இந்திய எச்.ஏ.எல். நிறுவன ஊழியர் சங்கம் சார்பில் 14-ந் தேதி (நேற்று) காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இதுகுறித்து நிர்வாகத்துடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால், திட்டமிட்டப்படி 14-ந் தேதி வேலை நிறுத்தம் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி எச்.ஏ.எல். ஊழியர்கள் நேற்று காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினர். இந்த நிறுவனத்திற்கு நாடு முழுவதும் 9 கிளைகள் இருக்கின்றன. இந்த 11 கிளைகளில் பணியாற்றும் சுமார் 10 ஆயிரம் ஊழியர்கள் இந்த வேலை நிறுத்தத்தில் பங்கேற்றுள்ளனர்.
இந்த வேலை நிறுத்த போராட்டத்தால் எச்.ஏ.எல். நிறுவனத்தில் போர் விமானங்கள் உற்பத்தி செய்யும் பணிகள் முடங்கியுள்ளன. இதுகுறித்து எச்.ஏ.எல். நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ஊழியர்களின் சம்பள விகிதத்தை மாற்றி அமைத்து, அதனை முன்கூட்டியே அமல்படுத்த நிர்வாகம் ஒப்புக்கொண்டது. ஆனால் ஊழியர்கள் அவற்றை ஏற்றுக்கொள்ளாமல் வேலை நிறுத்தத்தை தொடங்கியுள்ளனர். வேலை நிறுத்தத்தை கைவிடுமாறு கேட்டுக் கொண்டோம். இதை ஊழியர்கள் ஏற்கவில்லை.
இவ்வாறு எச்.ஏ.எல். நிறுவனம் தெரிவித்துள்ளது.
அகில இந்திய எச்.ஏ.எல். நிறுவன ஊழியர்கள் சங்க தலைமை ஒருங்கிணைப்பாளர் சூர்யதேவர சந்திரசேகர் கூறும்போது, "சம்பள விகிதத்தை மாற்றி அமைக்கும் எங்களின் கோரிக்கை ஏற்கப்படவில்லை. இதனால் நாங்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை தொடங்கியுள்ளோம். இதில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் பங்கேற்றுள்ளனர். இதனால் பணிகள் முடங்கியுள்ளன" என்றார்.