கீழடி அகழ்வாராய்ச்சி முடிவு உலகம் முழுவதும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது - தொல்லியல் துறை கண்காணிப்பாளர் பேட்டி
கீழடியில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சி முடிவு உலகம் முழுவதும் பல்வேறு எதிர்பார்ப்பை உருவாக்கி உள்ளது என்று தொல்லியல் துறை கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
திருப்புவனம்,
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் யூனியனைச் சேர்ந்த கீழடியில் நடைபெற்ற முதல் மற்றும் 2-வது கட்ட அகழ்வாராய்ச்சி பணியின்போது தொல்லியல் துறை கண்காணிப்பாளராக பணியாற்றிவர் அமர்நாத் ராமகிருஷ்ணன்.
இவர் தற்போது அசாம் மாநிலத்தில் மத்திய தொல்லியல் துறை கண்காணிப்பாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இவர் நேற்று கீழடிக்கு வந்து அங்கு நடைபெற்ற 5-வது கட்ட அகழ்வாராய்ச்சி பணிகளையும், அங்கு கண்டுபிடிக்கப்பட்ட உறைகிணறு, இரட்டைச் சுவர், வட்ட சுவர், தண்ணீர் தொட்டி, மண் பானை, ஓடுகள், சுடுமண் ஓடுகள், செங்கற்களால் ஆன தரைத்தளம், வாய்க்கால்களுடன் கூடிய சுவர்கள் ஆகியவற்றையும், தங்க ஆபரணங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களையும் பார்வையிட்டார்.
அதன் பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழக தொல்லியல் துறை ஆணையர் உதயச்சந்திரன் உத்தரவின் பேரில் இங்கு வந்து நான் பார்த்து இங்கு பணியாற்றும் அலுவலர்களுக்கு ஆலோசனை கூறினேன்.
தமிழக தொல்லியல் துறை சார்பில் 4 மற்றும் 5-வது கட்ட ஆராய்ச்சி பணிகள் நல்ல முறையில் நடைபெற்றுள்ளது. மத்திய தொல்லியல் துறை செய்த ஆராய்ச்சி போன்று மாநில தொல்லியல் துறையினரும் பணியாற்றி உள்ளனர். இந்த பணிகளில் ஈடுபட்ட அனைவரையும் பாராட்டுகிறேன்.
நாங்கள் முதல் மற்றும் 2-வது கட்ட ஆராய்ச்சி பணிகளை இங்கு மேற்கொண்ட போது கிடைத்த பொருட்கள் கி.மு 3-ம் நூற்றாண்டை சேர்ந்தது என்பது தெரிய வந்தது. தற்போது தமிழக தொல்லியல் துறையினர் கி.மு 6-வது நூற்றாண்டைச் சேர்ந்த பொருட்களை கண்டு பிடித்துள்ள னர்.
கீழடியில் தொல்லியல் மேடு உள்ளது. இந்த மேட்டில் விரிவாக ஆராய்ச்சி பணிகளை மேற்கொள்ள வேண்டும். இந்த பகுதி மொத்தம் 110 ஏக்கர் நிலப்பரப்பு கொண்டதாகும். இதில் மத்திய, மாநில தொல்லியல் துறை சார்பில் 6 ஏக்கர் நிலத்தில் தான் ஆராய்ச்சி பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் கிடைத்துள்ள பொருட்கள் பழங்கால தமிழர் வாழ்க்கையின் சான்றாக உள்ளது. அடுத்து நடைபெறும் ஆராய்ச்சியின் போது 110 ஏக்கர் நிலத்தில் குறைந்தது 25 சதவீதமாவது அகழ்வாராய்ச்சி பணிகள் செய்ய வேண்டும். இவ்வாறு ஆராய்ச்சி செய்யும் போது மேலும் பல பொருட்கள் நமக்கு கிடைக்கும்.
கீழடி அகழ்வாராய்ச்சி பணிக்கு நிலம் கொடுத்த உரிமையாளர்களை பாராட்டுகிறேன். நில உரிமையாளர்கள் ஒத்துழைப்பு இல்லாமல் இந்த ஆராய்ச்சி பணிகள் இவ்வளவு சிறப்பாக நடைபெற்றிருக்காது. தொல்லியல் துறை பணி என்பது மிகவும் நுணுக்கமாகவும், அதே நேரத்தில் பொறுமையாகவும் செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் தான் நல்ல பலனை அடைய முடியும்.
5-வது கட்ட ஆராய்ச்சியை பார்க்க தற்போது ஏராளமான மாணவ-மாணவிகள் வந்துள்ளனர். அந்த மாணவர்களுக்கு இங்கு நடைபெறும் தொல்லியல் துறை அகழாய்வு குறித்து தெரியும் வகையில் பாடப்புத்தகங்களில் கீழடி வரலாற்றை அரசு சேர்க்க வேண்டும். கீழடி அகழ்வாராய்ச்சி முடிவு இன்று உலகம் முழுவதும் பல்வேறு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. அடுத்து நடைபெறும் 6-வது கட்ட அகழ்வாராய்ச்சியை மத்திய, மாநில அரசுகள் சேர்ந்து செய்தால் சிறப்பாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிலையில் நேற்று மாலை மதுரை ஐகோர்ட்டு நீதிபதி வைத்தியநாதன் கீழடி அகழ்வாராய்ச்சி பணிகளை பார்வையிட்டு தொல்லியல் துறை அதிகாரிகளிடம் அங்கு கிடைத்த பொருட்கள் குறித்த விவரங்களை கேட்டறிந்தார்.