சூளகிரி பகுதியில் சாலை, மேம்பால பணிகளை கலெக்டர் ஆய்வு
சூளகிரி பகுதியில் சாலை, மேம்பால பணிகளை கலெக்டர் பிரபாகர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி பகுதியில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் நடைபெற்று வரும் சாலை பணிகள், முடிவுற்ற மேம்பால பணிகள், புதிதாக அமைக்கப்பட வேண்டிய புறவழிச்சாலைகளை கலெக்டர் எஸ்.பிரபாகர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே பாத்தகோட்டா சாலையில் ரூ. 2 கோடியே 90 லட்சம் மதிப்பிலான உயர்மட்ட பாலம் கட்டி முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டில் உள்ளது. சூளகிரி நகருக்கு புறவழிச்சாலை அமைப்பதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க நிதி ஒதுக்கீடு செய்து ரூ.5.70 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, ஆய்வு பணிகள் நடைபெற்று வருகிறது.
தளி, அஞ்செட்டி, தேன்கனிக்கோட்டை, கெலமங்கலம் போன்ற மலைப்பகுதிகளில் வாழும் மக்கள் நகர பகுதிகளுக்கு எளிதில் சென்று வர சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது. ஓசூர் மற்றும் தேன்கனிக்கோட்டை சாலை விரிவாக்க பணிகள் ரூ.11 கோடியே 66 லட்சம் மதிப்பில் மேற்கொள்ளப்படுகிறது. தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி, நாட்ராம்பாளையம் சாலையில் நபார்டு மற்றும் கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் ரூ. 4 கோடியே 40 லட்சம் மதிப்பில் உயர்மட்ட பாலம் கட்டும் பணிகள் நடைபெறுகிறது.
இந்த திட்ட பணிகள் முழுமையடைந்த பிறகு, ஓசூர், சூளகிரி போன்ற பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளுக்கு செல்லும் வழியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாது.
இவ்வாறு கலெக்டர் கூறினார்.
இந்த ஆய்வின்போது, நெடுஞ்சாலைத்துறை செயற்பொறியாளர் சரவணன், கோட்டப்பொறியாளர்கள் தாரகேஸ்வரன், நந்தகுமார், பொற்கொடி, உதவி இயக்குனர் கவிதா மற்றும் பொறியாளர்கள், சூளகிரி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் விமல் ரவிக்குமார், ராமச்சந்திரன் உள்பட பலர் உடனிருந்தனர்.