திருச்சி நகைக்கடையில் கொள்ளை நடந்தது எப்படி? பரபரப்பு தகவல்கள்

திருச்சி நகைக்கடையில் கொள்ளை நடந்தது எப்படி? என்பது பற்றி பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளது.

Update: 2019-10-14 23:30 GMT
திருச்சி,

திருச்சியில் லலிதா ஜூவல்லரி நகைக்கடையில் கடந்த 2-ந் தேதி அதிகாலை நடந்த கொள்ளை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கடையின் சுவரை துளையிட்டு கொள்ளையர்கள் உள்ளே நுழைந்து லாவகமாக நகைகளை கொள்ளையடித்து சென்றது போலீசாருக்கு அதிர்ச்சியை உண்டாக்கியது. கடையில் பொருத்தியிருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளில் கொள்ளையர்கள் 2 பேரின் உருவம் பதிவாகி இருந்தது. அவர்கள் தங்களை அடையாளம் காணாமல் இருப்பதற்காக உடல் முழுவதையும் மறைக்கும் வகையில் உடையையும், பொம்மை முகமூடியையும் அணிந்திருந்தனர். போலீசாருக்கு பெரும் சவாலாக முதலில் கருதப்பட்ட இந்த வழக்கில் அடுத்தடுத்து அதிரடி திருப்பங்கள் நடந்தது தான் ஆச்சரியம்.

சம்பவம் நடந்த தினம் முதல் திருச்சி உள்பட டெல்டா மாவட்டங்களில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது. கடந்த 3-ந் தேதி புதுக்கோட்டையில் ஒரு விடுதியில் தங்கியிருந்த வட மாநிலத்தை சேர்ந்த 6 பேர் சிக்கினர். அவர்களுக்கு திருச்சி நகைக்கடை கொள்ளை சம்பவத்தில் தொடர்பு இருக்கலாம் என கருதப்பட்டது. ஆனால் அவர்கள் வேறு சம்பவத்தில் ஈடுபட்டு தங்கியிருந்தது தெரியவந்தது.

இதற்கிடையில் திருவாரூரில் போலீசார் நடத்திய வாகன சோதனையின்போது மணிகண்டன் என்பவன் சிக்கினார். அவருடன் வந்த சுரே‌‌ஷ் தப்பியோடினார். மணிகண்டனிடம் விசாரணை நடத்தியதில் திருச்சி லலிதா ஜூவல்லரி நகைக்கடையில் நடந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது பிரபல கொள்ளையன் திருவாரூர் முருகன் என்பது தெரியவந்தது. போலீசார் அடுத்த கட்ட நகர்வை தொடங்கிய நிலையில் சுரே‌‌ஷ், திருவண்ணாமலை கோர்ட்டில் சரண் அடைந்தார். திருவாரூர் முருகனும் வேறு வழியில்லாமல் பெங்களூரு கோர்ட்டில் சரண் அடைந்தார்.

இதற்கிடையில் இந்த கொள்ளை வழக்கில் தொடர்புடைய மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே குருவித்துறை பகுதியை சேர்ந்த கணேசனை (வயது 35) போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். மேலும் அவரது வீட்டின் அருகே பதுக்கி வைக்கப்பட்டிருந்த 6 கிலோ 100 கிராம் தங்க நகைகளை பறிமுதல் செய்தனர். இந்த வழக்கில் இதுவரை மொத்தம் 22¾ கிலோ நகைகள் மீட்கப்பட்டுள்ளன. மீதமுள்ள நகைகளை மீட்கவும் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்த வழக்கில் மணிகண்டன் வாகன சோதனையில் சிக்கியது தான் திருப்பு முனையாக அமைந்தது. கொள்ளைபோன நகைகளும் அடுத்தடுத்து கைப்பற்றப்பட்டன. பெரிய நகைக்கடையில் நடந்த கொள்ளை சம்பவத்தில் இதுபோன்று உடனடியாக நகைகள் கைப்பற்றப்பட்டதில்லை என போலீசார் தெரிவித்தனர். இந்த நிலையில் லலிதா ஜூவல்லரி நகைக்கடையில் திருவாரூர் முருகன் தலைமையில் கொள்ளையர்கள் நகைகளை கொள்ளையடித்து எப்படி? என்பது புதிராக இருந்தது. மணிகண்டன், சுரே‌‌ஷ், திருவாரூர் முருகன், கணேசன் ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் அவர்கள் கொள்ளையில் ஈடுபட்டது எப்படி என்பது போலீசாருக்கு தெரியவந்தது. இதுகுறித்து போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

கைதான கணேசனுக்கும், திருவாரூர் முருகனுக்கும் சேலம் சிறையில் பழக்கம் ஏற்பட்டுள்ளது. கணேசன் மீதும் கொள்ளை வழக்குகள் ஏராளமாக உள்ளன. கணேசனை சிறையில் இருந்து முருகன் ஜாமீனில் வெளியே எடுத்துள்ளார். கொள்ளை சம்பவத்தில் ஈடுபடும்போது கணேசனையும் திருவாரூர் முருகன் அழைத்து செல்வதை வழக்கமாக கொண்டிருந்துள்ளார். அதுபோல தான் லலிதா ஜூவல்லரி நகைக்கடை கொள்ளை சம்பவத்திலும் கணேசனை துணைக்கு சேர்த்துள்ளது தெரியவந்திருக்கிறது. கணேசன் கார் ஓட்டுவதில் வல்லவர் என்பதால் வெளியூர்களுக்கு செல்லும் போது கணேசனை தான் கார் ஓட்ட முருகன் பயன்படுத்தி இருக்கிறார்.

சம்பவத்தன்று நகைக்கடையில் உள்ளே நுழைந்து நகைகளை லாவகமாக எடுத்து கொள்ளையடித்தது முருகனும், கணேசனும் என தெரியவந்துள்ளது. கடந்த 2 மாதங்களுக்கு முன்பே நகைக்கடைக்கு நகைகள் வாங்குவது போல வந்து நோட்டமிட்டுள்ளனர். குறிப்பாக கடையின் நாலாபுறமும் சுற்றிபார்வையிட்டுள்ளனர். கடைக்குள் நுழைய ஏதுவாக எங்கே இடம் உள்ளது? என்பதை அவர்கள் பார்வையில் நோட்டமிட்டிருக்கின்றனர். இதில் தான் கடையின் இடது புறத்தை அவர்கள் தேர்வு செய்துள்ளனர். சுவரில் ஒரே நாளில் அவர்கள் துளை போடவில்லை. 3 அல்லது 4 நாட்களாக கொஞ்சம், கொஞ்சமாக சுவரில் கடப்பாரை மூலமாக துளையிட்டுள்ளனர்.

கொள்ளையில் ஈடுபடுவதற்கு முன்பும், பின்பும் அவர்கள் எந்த செல்போனும் பயன்படுத்தவில்லை. அவர்கள் கொள்ளை சம்பவத்தில் ஈடுபடும் போது வழக்கமாக வாக்கி-டாக்கி பயன்படுத்துவது உண்டு. இந்த நிலையில் சென்னையில் ஒரு கொள்ளை வழக்கில் வாக்கி-டாக்கி பயன்படுத்தியதில் திருவாரூர் முருகன் கைதானார். இதனால் திருச்சி நகைக்கடை கொள்ளை சம்பவத்தின்போது வாக்கி-டாக்கி பயன்படுத்துவதை தவிர்த்துள்ளனர். அதற்கு பதிலாக கயிறை பயன்படுத்தி உள்ளனர்.

நகைகளை கொள்ளையடித்த பின் காரில் தான் தப்பிச்சென்றுள்ளனர். கொள்ளையடித்த நகைகளில் முருகன் தனக்கு 2 மடங்கை எடுத்துக்கொண்டு மற்றவர்களுக்கு பிரித்து கொடுத்துள்ளார். இதனையும் எடை மி‌‌ஷன் வைத்து அளந்து கொடுத்துள்ளார். இந்த கொள்ளை சம்பவத்திற்கு பின் பெங்களூருவில் நிரந்தரமாக தங்கிவிட திருவாரூர் முருகன் திட்டமிட்டிருந்தார். முருகனை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தி ய பின் தான் மேலும் விவரங்கள் தெரியவரும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்