அரசு டிரைவரின் மனைவி-மகள் தீக்குளிக்க முயற்சி - கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு

திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் அரசு வாகன டிரைவரின் மனைவி, மகள் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2019-10-14 22:30 GMT
திண்டுக்கல்,

திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று மதியம் ஒரு பெண், சிறுமியுடன் மனு கொடுக்க வந்தார். அங்கு போலீசார் மனு கொடுக்க வரும் நபர்களை சோதனையிட்ட வண்ணம் இருந்தனர். இதை கவனித்த அந்த பெண் தனது கைப்பையில் இருந்து மண்எண்ணெய் பாட்டிலை வெளியே எடுத்தார். அதை பார்த்ததும் போலீசார் ஓடி சென்றனர்.

அதற்குள் அந்த பெண் பாட்டிலில் இருந்த மண்எண்ணெயை தனது உடலிலும், சிறுமியின் உடலிலும் ஊற்றினார். பின்னர் இருவரும் தீக்குளிக்க முயன்றனர். ஆனால், போலீசார் துரிதமாக செயல்பட்டு 2 பேரையும் மீட்டனர். மேலும் அவர்கள் மீது தண்ணீரை ஊற்றினர். அதில் சிறுமிக்கு லேசான மயக்கம் ஏற்பட்டது. உடனே சிறுமியின் முகத்தில் தண்ணீர் தெளித்து மயக்கத்தை தெளியவைத்தனர்.

இதையடுத்து 2 பேரிடமும், போலீசார் விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் சீலப்பாடியை சேர்ந்த சகுந்தலா (வயது 39), அவருடைய மகள் கோகுலபிரியா (17) என்பதும், கோகுலபிரியா 11-ம் வகுப்பு படித்து வருவதும் தெரியவந்தது.

பின்னர் போலீசாரிடம், சகுந்தலா கூறுகையில், எனது கணவர் முன்னாள் ராணுவ வீரர். மேலும் தாலுகா அலுவலகத்தில் அரசு வாகன டிரைவராக உள்ளார். எங்களுக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். நான் தனியார் நிறுவனத்தில் வேலை செய்தேன். இந்த நிலையில் என்னை, கணவர் துன்புறுத்தினார். மேலும் நான் வேலை செய்த நிறுவனத்துக்கு சென்று தகராறு செய்தார். இதனால் என்னை பணிநீக்கம் செய்து விட்டனர். நான், எனது மகளுடன் தனியாக வசிக்கிறேன். எனினும், தொடர்ந்து என்னை மிரட்டி வருகிறார். எனவே, இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

இதையடுத்து போலீசார் அவருக்கு அறிவுரை கூறி மனு கொடுக்க அழைத்து சென்றனர். தாய்-மகள் தீக்குளிக்க முயன்ற சம்பவத்தால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

அதேபோல் கன்னிவாடியை சேர்ந்த ஜமால்முகமது என்பவரும், சொத்து பிரச்சினை தொடர்பாக மனு கொடுக்க வந்தார். அப்போது தீக்குளிக்க மண்எண்ணெய் பாட்டிலை கொண்டு வந்திருந்தார். அதை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் சாணார்பட்டி ஒன்றியம் கம்பிளியம்பட்டியை சேர்ந்த முதியவர் குருசாமி, மகன்கள் தன்னை கவனிக்கவில்லை என்று கூறி மண்எண்ணெய் பாட்டிலுடன் மனு கொடுக்க வந்தார். அவரிடம் இருந்த மண்எண்ணெய் பாட்டிலையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்