வீடியோ எடுத்து மிரட்டி பெண் பலாத்காரம்: ஆட்டோ டிரைவரின் நண்பர்களிடம் போலீசார் தீவிர விசாரணை
வீடியோ எடுத்து மிரட்டி பெண்ணை பலாத்காரம் செய்த வழக்கில் கைதான ஆட்டோ டிரைவரின் நண்பர்கள் 2 பேரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம்,
சேலம் மாவட்டம் காகாபாளையம் அடுத்த செல்லியம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் மோகன்ராஜ் (வயது 42). ஆட்டோ டிரைவரான இவர், அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை மிரட்டி பலாத்காரம் செய்யும் வீடியோ வைரலாக பரவியது. இதனிடையே மகுடஞ்சாவடியை சேர்ந்த வாலிபர் ஒருவரை ஓரின சேர்க்கைக்கு அழைத்ததாக கொடுக்கப்பட்ட புகாரில் மோகன்ராஜ் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில், மோகன்ராஜ் மிரட்டி பலாத்காரம் செய்யப்பட்ட பெண், கொண்டலாம்பட்டி போலீசில் புகார் செய்தார். இதையடுத்து ஆட்டோ டிரைவர் மோகன்ராஜ் மீது பலாத்காரம், கொலை மிரட்டல் உள்பட 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும், இந்த வழக்கில் அவரை சிறையில் வைத்து கைது செய்தனர்.
பின்னர் அவரை 7 நாட்கள் காவலில் எடுத்து கொண்டலாம்பட்டி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அவரது செல்போனை கைப்பற்றி ஆய்வு செய்ததில், புகார் செய்யப்பட்ட பெண்ணை பலாத்காரம் செய்த வீடியோவும், மற்ற சில வீடியோவும் சிக்கியுள்ளது. அவருக்கு உடந்தையாக இருந்த நண்பர்கள் யார்? யார்? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
செல்லியம்பாளையம் கிராமத்தில் உள்ள அவரது வீட்டிற்கு அழைத்து சென்று ஆட்டோ டிரைவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, அங்கு ஏதாவது செல்போன் உள்ளதா? என ஆய்வு மேற்கொண்டனர். ஆனால் செல்போன் எதுவும் சிக்கவில்லை.
இதனிடையே, மோகன்ராஜ் உடன் ஆட்டோ ஓட்டி வந்த அவரது நண்பர்களான இரும்பாலை பெருமாகவுண்டம்பட்டி பகுதியை சேர்ந்த சதாசிவம் (40), மணிகண்டன் (25) ஆகிய 2 பேரை போலீசார் பிடித்தனர். அவர்களிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆட்டோ டிரைவர் மோகன்ராஜ் இதுவரை எத்தனை பெண்களை மிரட்டி பலாத்காரம் செய்துள்ளார்? இதுபற்றிய விவரத்தை ஏதேனும் தெரிவித்தாரா? பெண்களை பலாத்காரம் செய்யும் வீடியோ உங்களிடம் உள்ளதா? அவர் பலாத்காரம் செய்யும் பெண்களை, நண்பர்களுக்கு விருந்தாக்கியதாக கூறப்படுவது உண்மையா? உள்பட பல்வேறு கேள்விகளை கேட்டு சதாசிவம் மற்றும் மணிகண்டனிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.