குரங்குமுடி எஸ்டேட் பகுதியில், திருடப்பட்ட விநாயகர் சிலை மீட்பு
குரங்குமுடி எஸ்டேட் பகுதியில் திருடப்பட்ட விநாயகர் சிலை மீட்கப்பட்டது.
வால்பாறை,
வால்பாறை அருகே குரங்குமுடி எஸ்டேட் பகுதியில் அமைந்துள்ள விநாயகர் கோவிலின் வெண்கல விநாயகர் சிலை கடந்த 2 மாதங் களுக்கு முன்பு திருட்டுப்போனது.இதுதொடர்பாக வால்பாறை போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து வால்பாறை போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் இந்த சிலை திருட்டு தொடர்பான வழக்கை கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கவனத்திற்கு வால்பாறை போலீசார் கொண்டு சென்றனர்.
அதைத்தொடர்ந்து கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிறப்பித்த உத்தரவின் பேரில் திருச்சியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு வழக்கு மாற்றம் செய்யப்பட்டது. அதன்படி சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் உத்தரவின்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மயில்சாமி தலைமையில் வால்பாறை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வீரம்மாள் மற்றும் போலீசார் குரங்குமுடி எஸ்டேட் பகுதி மக்களிடம் நேரடியாக விசாரணை நடத்தினார்கள்.
இந்த விசாரணையின் அடிப்படையில் பல்வேறு நவீன தொழில்நுட்ப உதவிகளுடன் தொடர்ந்து விசாரணை நடத்துவதற்கும் சிலைகடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் முயற்சி மேற்கொண்டு வந்தனர். இந்தநிலையில் வால்பாறை நகராட்சி மார்க்கெட் பகுதியில் உள்ள பா.ஜ.க. அலுவலகம் அருகில் உள்ள பாத்திரக்கடையின் முன்னால் சாக்குப்பை ஒன்று கிடந்தது. இதுபற்றிய தகவல் அறிந்ததும் வால்பாறை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வீரம்மாள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சாக்குப்பையை அவிழ்த்து பார்த்தனர்.
அப்போது அந்த சாக்குப்பையில், குரங்குமுடி எஸ்டேட் பகுதியில் காணாமல் போன வெண்கல விநாயகர் சிலை இருந்ததும், சிலையை கடத்தியவர்கள்தான் மார்க்கெட் பகுதியில் போட்டுச்சென்றதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார், அந்தப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். இதைத்தொடர்ந்து சிலையை மீட்டதோடு, சிலையை கடத்தியவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.