ஊட்டி அருகே, நீரோடையில் கொட்டப்படும் பிளாஸ்டிக் கழிவுகள் - நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
ஊட்டி அருகே நீரோடையில் பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டப்படுகிறது. இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
ஊட்டி,
ஊட்டி நகராட்சியில் 36 வார்டுகள் உள்ளன. திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் மக்கும் குப்பைகள் மற்றும் மக்காத குப்பைகளை துப்புரவு பணியாளர்கள் நகராட்சி வாகனங்களில் வார்டு, வார்டாக சென்று பொதுமக்களிடம் பிரித்து வாங்கி சேகரித்து வருகின்றனர். குப்பைகளை தரம் பிரிக்காமல் வழங்கினால் வீடுகளில் மின் இணைப்பு மற்றும் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் ஊட்டி நகராட்சியின் 36-வது வார்டுக்கு உட்பட்டது அண்ணா காலனி ஆகும். இந்த காலனியில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் கடந்த பல நாட்களாக துப்புரவு பணியாளர்கள் வாகனங்களில் குப்பைகளை சேகரிக்க செல்லவில்லை. இதனால் பொதுமக்கள் தங்களது வீடுகளில் சேகரமான பிளாஸ்டிக், காய்கறி கழிவுகளை வனப்பகுதியையொட்டி உள்ள நீரோடையில் கொட்டி வருகின்றனர்.
மேலும் குப்பைகள் ஆங்காங்கே கொட்டப்படுவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு வருகிறது.
அண்ணா காலனியையொட்டி அடர்ந்த வனப்பகுதி உள்ளது. அந்த வனப்பகுதியில் காட்டெருமைகள், சிறுத்தைப்புலிகள், கடமான்கள் போன்ற வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. அங்கு வனப்பகுதியையொட்டி கொட்டப்படும் பிளாஸ்டிக் கழிவுகளை வனவிலங்குகள் உண்டால், அதன் உயிருக்கே ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. மேலும் பலத்த மழை பெய்யும் போது நீரோடையில் தண்ணீர் அதிகமாக செல்லும். இதனால் பிளாஸ்டிக் கழிவுகள் அடித்து செல்லப்பட்டு விளைநிலங்களுக்குள் புகும் அபாயம் இருக்கிறது. இது மக்காத தன்மை கொண்டதால் மண்ணின் வளம் பாதிக்கப்படுகிறது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:-
மலைச்சரிவான அண்ணா காலனியில் நாங்கள் வசித்து வருகிறோம். அங்கு 2 குப்பை தொட்டிகளில் குப்பைகள் நிரம்பி வழிகிறது. வீடுகளில் சேகரமாகும் குப்பைகள் சில நாட்களுக்கு பின்னர் தூர்நாற்றம் வீச ஆரம்பிக்கிறது.
நகராட்சி துப்புரவு பணியாளர்கள் அருகே உள்ள ரிச்சிங் காலனி, மஞ்சனக்கொரை பகுதிகளுக்கு குப்பைகளை சேகரிக்க வருகின்றனர். ஆனால் அண்ணா காலனிக்கு வருவது இல்லை. ஊட்டியில் இருந்து சிறிது தொலைவில் இருப்பதால் அதிகாரிகள் யாரும் கண்டுகொள்வது இல்லை. இதனால் குப்பைகளை திறந்தவெளியில் கொட்ட வேண்டிய நிலைமை உள்ளது. இதற்கு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.