கம்பம் புதிய பஸ்நிலையம் அருகே, அனுமதியின்றி செயல்பட்ட டாஸ்மாக் பார் அகற்றம்
கம்பம் புதிய பஸ்நிலையம் அருகே அனுமதியின்றி செயல்பட்ட டாஸ்மாக் பாரை போலீசார் நேற்று அகற்றினர்.
கம்பம்,
கம்பம் புதிய பஸ்நிலையம் அருகே டாஸ்மாக் கடையை திறப்பதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் அங்கு டாஸ்மாக் கடை திறக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதை தொடர்ந்து போலீஸ் பாதுகாப்புடன் டாஸ்மாக் கடை கடந்த 10-ந்தேதி திறக்கப்பட்டது.
இந்நிலையில் நேற்று முன்தினம் அந்த டாஸ்மாக் கடை அருகே புதிதாக பார் திறக்கப்பட்டு செயல்பட தொடங்கியது. இந்த பார் அனுமதியின்றி செயல்படுவதாக அப்பகுதி பொதுமக்கள் கம்பம் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சிலைமணி உத்தரவின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் வினோத்ராஜா மற்றும் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர்.
அதில் டாஸ்மாக் கடை அருகே அனுமதியின்றி பார் செயல்படுவது தெரியவந்தது. இதை தொடர்ந்து அனுமதியின்றி செயல்பட்ட பார் கூடாரத்தை போலீசார் அகற்றினர்.
பின்னர் பார் நடத்தியவரிடம் அனுமதியின்றி பார் நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்தனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.