முதல்-அமைச்சராக வேண்டும் என்பதற்காக 18 எம்.எல்.ஏ.க்களின் வாழ்க்கையை கெடுத்தவர் மு.க.ஸ்டாலின் - அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் குற்றச்சாட்டு

மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சராக வேண்டும் என்பதற்காக 18 எம்.எல்.ஏ.க்களின் வாழ்க்கையை கெடுத்து விட்டார், என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் குற்றம்சாட்டினார்.

Update: 2019-10-10 23:15 GMT
திண்டுக்கல், 

வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் நேற்று திண்டுக்கல்லில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு வெற்றிவாய்ப்பு எப்படி இருக்கிறது?

பதில்:- விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டமன்ற தொகுதிகளின் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும்.

கேள்வி:- தமிழகத்தில் பா.ஜனதா ஆட்சி நடைபெறுவதாக மு.க.ஸ்டாலின் கூறியிருக்கிறாரே?

பதில்:- சீன அதிபரை தமிழகத்துக்கு வரவழைத்து பேசுவதற்காக பிரதமர் மோடிக்கு, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். அதில் இருந்து அவரும் எங்களுடன் தான் இருக்கிறார் என்று தெரிகிறது.

கேள்வி:- சத்தியமங்கலம் பகுதியில் காட்டு யானைகள் அடிக்கடி வருகிறதே?

பதில்:- குட்டி யானையை தேடி யானைகள் வருவது இயற்கையானது. யானைகளிடம் இருந்து மக்களை காக்கும் பணியை வனத்துறை சிறப்பாக செய்து வருகிறது. யாருக்கும் எந்த பாதிப்பும் வராத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்.

கேள்வி:- 18 எம்.எல்.ஏ.க்களின் பதவி பறிபோனதற்கு டி.டி.வி.தினகரன் தான் காரணம் என்று புகழேந்தி கூறியிருக்கிறாரே?

பதில்:- 18 எம்.எல்.ஏ.க்களின் பதவி பறிபோனதற்கு டி.டி.வி. தினகரன் மட்டும் அல்ல, மு.க.ஸ்டாலினும் காரணம் தான். அவர் முதல்-அமைச்சராக வேண்டும், டி.டி.வி.தினகரன் துணை முதல்-அமைச்சராக வேண்டும் என்பதற்காக திட்டமிட்டு, 18 எம்.எல்.ஏ.க்களின் வாழ்க்கையை கெடுத்து விட்டார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்