பேரணாம்பட்டு அருகே, போலீசாரிடம் இருந்து தப்பியோடிய சாராய வியாபாரி பிடிபட்டார்

பேரணாம்பட்டு அருகே போலீசாரிடம் இருந்து தப்பியோடிய சாராய வியாபாரி பிடிபட்டார்.

Update: 2019-10-08 22:30 GMT
பேரணாம்பட்டு, 

பேரணாம்பட்டு கள்ளிச்சேரி கிராமத்தை சேர்ந்தவர் முத்து (வயது 25), சாராய வியாபாரி. இவர் அக்கிராமத்தில் சாராயம் விற்பனை செய்ததற்காக பேரணாம்பட்டு போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 30 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.

இதையடுத்து முத்துவை குடியாத்தம் கோர்ட்டில் ஆஜர்படுத்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ரவி, ஏட்டு இம்தியாஸ் ஆகியோர் மோட்டார் சைக்கிளில் நடுவே முத்துவை உட்கார வைத்து கொண்டு அழைத்து சென்றனர். செர்லப்பள்ளி அருகே திடீரென மழை பெய்தது. மழையில் நனையாமல் இருக்க மோட்டார் சைக்கிளில் இருந்து இறங்கி நின்றனர்.

அப்போது முத்து போலீசாரின் பிடியில் இருந்து தன்னை விலக்கிகொண்டு தப்பியோட முயற்சித்தார். ஏட்டு இம்தியாஸ் விரட்டி சென்று மடக்கி பிடித்தபோது அவரை கீழே தள்ளிவிட்டு தப்பியோடிவிட்டார். இதில் ஏட்டு இம்தியாசுக்கு கையில் காயம் ஏற்பட்டது.

தப்பியோடிய முத்துவை பிடிக்க போலீசார் தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது முத்துவின் மனைவி இலக்கியாவிடம் விசாரணை நடத்தியதில் அவர் கள்ளிச்சேரி கிராமம் மலையடிவாரத்தில் பதுங்கி இருப்பது தெரியவந்தது.

அதைத்தொடர்ந்து போலீசார் விரைந்து சென்று மலையடிவாரத்தில் பதுங்கி இருந்த முத்துவை நேற்று கைது செய்தனர்.

மேலும் செய்திகள்