திண்டுக்கல் அருகே, தலையில் கல்லை போட்டு முதியவர் கொலை

திண்டுக்கல் அருகே தலையில் கல்லை போட்டு முதியவர் படுகொலை செய்யப்பட்டார்.

Update: 2019-10-08 23:00 GMT
குள்ளனம்பட்டி, 

திண்டுக்கல் பொன்மாந்துறை புதுப்பட்டி அருகே உள்ள முனியப்பன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராமசாமி (வயது 60). இவருக்கு வெள்ளையம்மாள் (58) என்ற மனைவியும், ஸ்ரீரங்கன் (32), ராமச்சந்திரன் (30), திருமூர்த்தி (29), ராஜசேகர் (27), ரவிச்சந்திரன் (23) ஆகிய 5 மகன்களும் உள்ளனர்.

இதில் ராமசாமியின் 4-வது மகன் ராஜசேகர் மாடுகள் வளர்த்து வருகிறார். அதை பராமரிப்பதற்காக வீட்டின் அருகே உள்ள கலிங்கதெருவில் மாட்டுக்கொட்டகை அமைத்து ராமசாமி அங்கேயே தங்கியிருந்தார்.

இந்த நிலையில் ராமசாமி நேற்று மதியம் அதே பகுதியை சேர்ந்த அண்ணாமலை என்பவருடன் மாட்டுக்கொட்டகையில் மது குடித்து உள்ளார். அப்போது போதை தலைக்கேறியதும் அவர்களுக்குள் வாக்குவாதம் முற்றியது. இதனால் ஒருவரையொருவர் தாக்கி கொண்டனர்.

இதில் ஆத்திரமடைந்த அண்ணாமலை அருகே இருந்த கல்லை தூக்கி ராமசாமி தலையில் போட்டதாக கூறப்படுகிறது. இதில் ராமசாமி தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு உறவினர்கள் அங்கு வருவதற்குள் அண்ணாமலை அங்கிருந்து தப்பி சென்று விட்டார்.

இதுகுறித்து தகவலறிந்ததும் திண்டுக்கல் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ராமசாமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து ராமசாமியின் மகன் ராஜசேகர் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் தெய்வம் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து அண்ணாமலையை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்