வினோத் தாவ்டேக்கு சீட் மறுப்பு 8 பா.ஜனதா நிர்வாகிகள் ராஜினாமா
பா.ஜனதா தலைவர் வினோத் தாவ்டேக்கு சீட் மறுக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து போரிவிலியில் 8 பா.ஜனதா நிர்வாகிகள் பதவியை ராஜினாமா செய்து உள்ளனர்.
மும்பை,
பா.ஜனதா தலைவர் வினோத் தாவ்டேக்கு சீட் மறுக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து போரிவிலியில் 8 பா.ஜனதா நிர்வாகிகள் பதவியை ராஜினாமா செய்து உள்ளனர்.
8 பேர் ராஜினாமா
மராட்டிய சட்டசபை தேர்தல் வருகிற 21-ந் தேதி நடக்கிறது. இதில் பா.ஜனதா மூத்த தலைவர்களான ஏக்நாத் கட்சே, பிரகாஷ் மேத்தா, வினோத் தாவ்டே போன்றவர்களுக்கு சீட் கொடுக்காமல் பா.ஜனதா கட்சி புறக்கணித்தது. இந்தநிலையில் வினோத் தாவ்டேக்கு சீட் கொடுக்காததற்கு எதிர்ப்பு தெரிவித்து போரிவிலி பா.ஜனதா தலைவர் தீபக் பட்டேன்கர் மற்றும் 7 கட்சி வார்டு தலைவர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்து உள்ளனர்.
இதுகுறித்து ராஜினாமா செய்த உள்ளூர் நிர்வாகி ஒருவர் கூறும்போது, வௌியூரை சேர்ந்தவருக்கு நாங்கள் வேலை செய்ய மாட்டோம் என்றார். போரிவிலியில் தற்போது பா.ஜனதா சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள சுனில் ரானே ஒர்லியை சேர்ந்தவர் ஆவார்.
சுனில் ரானேவுக்கு சிக்கல்
உள்ளூர் நிர்வாகிகள் 8 பேர் ராஜினாமா செய்து இருப்பது சுனில் ரானேவுக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.
இந்தநிலையில் கோபால் ஷெட்டி எம்.பி. அதிருப்தியில் உள்ள உள்ளூர் நிர்வாகிகளை அழைத்து பேசியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவர் கூறுகையில், “ அதிருப்தியில் உள்ள நிர்வாகிகளை சமாதானம் செய்யும் முயற்சியில் இறங்கியுள்ளோம். எல்லா தவறான புரிதல்களும் தீர்க்கப்படும். எல்லோரும் சுனில் ரானேயின் வெற்றிக்காக கண்டிப்பாக உழைப்பார்கள் ” என்றார்.