மோட்டார்சைக்கிள் மீது சரக்கு வேன் மோதி மில்தொழிலாளி சாவு - உறவினர்கள் சாலைமறியல்

வேடசந்தூர் அருகே சரக்கு வேன் மோதி மோட்டார்சைக்கிளில் சென்ற மில் தொழிலாளி பலியானார். அவரது உறவினர்கள் சாலைமறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2019-10-06 23:00 GMT
வேடசந்தூர், 

வேடசந்தூர் அருகே உள்ள தோப்பட்டியை சேர்ந்த நடராஜன் மகன் கார்த்திக்ராஜா(வயது 25). இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் மில்லில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.

நேற்று மாலை இவர் வேடசந்தூர் வந்துவிட்டு மீண்டும் தனது ஊருக்கு செல்வதற்காக மோட்டார்சைக்கிளில் புறப்பட்டு சென்றார். வேடசந்தூர்-கரூர் சாலையில் கருக்காம்பட்டி பிரிவிற்கு முன்பு சென்றுகொண்டிருந்தபோது அந்த வழியாக வந்த சரக்கு வேன் மோட்டார்சைக்கிள் மீது மோதியது. இதில் கார்த்திக்ராஜா தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். விபத்து நடந்ததும் சரக்குவேன் டிரைவர் அங்கிருந்து தப்பியோடி விட்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் அவரது உறவினர்கள் அங்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் கருக்காம்பட்டி பிரிவுரோடு அருகே சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதனையடுத்து வேடசந்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சாலைமறியல் செய்தவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை கலைய செய்தனர். பின்னர் கார்த்திக்ராஜா உடலை போலீசார் மீட்டு வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிதசோதனைக்காக அனுப்பிவைத்தனர். மேலும் விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்