பெட்ரோல் விற்பனை நிலையங்களில் இரவு நேரங்களில் குறைந்தபட்சம் 4 பேர் பணியில் இருக்க வேண்டும்

பெட்ரோல் விற்பனை நிலையங்களில் இரவு நேரங்களில் குறைந்தபட்சம் 4 பேர் பணியில் இருக்க வேண்டும் என புதுக்கோட்டையில் நடைபெற்ற விழிப்புணர்வு கூட்டத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆறுமுகம் பேசினார்.

Update: 2019-10-06 22:30 GMT
புதுக்கோட்டை,

புதுக்கோட்டை டவுன் உட்கோட்டத்திற்கு உட்பட்ட நகைக்கடை மற்றும் நகை அடகுக்கடையின் உரிமையாளர்கள், தேசிய வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், தனியார் வங்கிகள், தனியார் நிதி நிறுவனங்களின் பொறுப்பாளர்கள், பெட்ரோல் விற்பனைநிலைய உரிமையாளர்கள், திருமண மண்டப உரிமையாளர்கள், விடுதி உரிமையாளர்கள் மற்றும் அரசு டாஸ்மாக் கடையின் பொறுப்பாளர்கள் கலந்து கொள்ளும் குற்ற தடுப்பு விழிப்புணர்வு கூட்டம் புதுக்கோட்டையில் நடைபெற்றது.

இதற்கு டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆறுமுகம் தலைமை தாங்கி பேசுகையில், அனைத்து தேசிய வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகள், ஏ.டி.எம். மையங்கள், நகைக்கடைகள், நகை அடகு கடைகள் மற்றும் பெட்ரோல் விற்பனை நிலையம் உள்ள இடங்களில் உள்ளேயும், வெளியேயும் கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அலாரம் ஒரு வார காலத்திற்குள் அமைக்க வேண்டும். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அலாரம் அமைக்கப்பட்டு இருந்தால், மாதம் ஒருமுறை பராமரிப்பாளர்களை கொண்டு சரியாக இயங்குகிறதா என தணிக்கை செய்ய வேண்டும்.

போலீசாருக்கு தகவல்

வேலை முடிந்து வங்கிகள், நகைக்கடை மற்றும் நகை அடகு கடைகளை பூட்டிவிட்டு செல்லும்போது கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அலாரத்தின் மின் இணைப்பை துண்டிப்பு செய்யாமல் பார்த்து கொள்ள வேண்டும். வங்கிகளில் கணக்கு வைத்து உள்ளவர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் தவிர சந்தேகப்படும்படியான நபர்கள் வந்தால் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். வங்கிகளுக்கு எந்தவேலையும் இல்லாமல் அடிக்கடி வந்து செல்லும் நபர்கள் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

4 பேர் பணியில் இருக்க வேண்டும்

நகைக்கடைகளுக்கு நகை வாங்க வருபவர்களின் செயல்பாடுகளை கடை ஊழியர்கள் கண்காணிக்க வேண்டும். நகைக்கடைகளில் வாடிக்கையாளர்களுக்கு நகைகளை காண்பிக்கும்போது கடை ஊழியர்கள் கவனமாகவும், எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும். நகைக்கடைகள் மற்றும் நகை அடகுக்கடைகளில் அதிகப்படியாக ரூபாய்களை வைக்க கூடாது. பெட்ரோல் விற்பனை நிலையங்களில் இரவு நேரங்களில் குறைந்தபட்சம் 4 பேர் பணியில் இருக்க வேண்டும். அனைத்து வங்கிகள், ஏ.டி.எம். மையங்கள், நகைக்கடைகள், நகை அடகுக்கடைகள் உள்ள கட்டிடங்களின் வெளிப்புறங்களில் இரவு நேரங்களில் பூட்டியுள்ள கதவுகள் தெரியும்படி விளக்குகளை எரியவிட வேண்டும். டாஸ்மாக் கடையை இரவு பூட்டிய பின் 2 பாதுகாவலர்களை நியமித்து பார்த்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் அப்துல்ரகுமான், சிங்காரவேல், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் பூர்விகா, பிரகாஷ் மற்றும் புதுக்கோட்டை உட்கோட்டத்தில் உள்ள நகைக்கடை மற்றும் நகை அடகுக்கடையின் உரிமையாளர்கள், தேசிய வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், தனியார் வங்கிகள், தனியார் நிதி நிறுவனங்களின் பொறுப்பாளர்கள், பெட்ரோல் விற்பனை நிலைய உரிமையாளர்கள், திருமண மண்டப உரிமையாளர்கள், விடுதி உரிமையாளர்கள் மற்றும் அரசு டாஸ்மாக் கடையின் பொறுப்பாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்