ரெயில் படிக்கட்டில் பயணம்-செல்போன் பறிப்பு: திருடர்களை பிடிக்க ரெயிலில் இருந்து குதித்த ஆந்திர வாலிபர் - பரிதாப பலி

திருவொற்றியூர் அருகே ரெயில் படிக்கட்டில் அமர்ந்து பயணம் செய்த போது, செல்போனை பறித்துச்சென்ற திருடர்களை பிடிக்க ரெயிலில் இருந்து குதித்த ஆந்திர வாலிபர் பரிதாபமாக பலியானார். இது தொடர்பாக 2 பேர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டனர்.

Update: 2019-10-05 22:35 GMT
பெரம்பூர்,

ஆந்திரா மாநிலம் கூடுரை சேர்ந்தவர் சாந்தினி பாஷா (வயது 26). இவர் தனது சொந்த வேலையாக சென்னை வந்தார். பின்னர், நேற்று சென்டிரலில் இருந்து ஜி.டி. விரைவு ரெயிலில் ஏறி, கூடூருக்கு சென்று கொண்டிருந்தார்.

திருவொற்றியூர், எண்ணூர் அருகில் ரெயில் மித வேகமாக சென்று கொண்டிருந்தது. அப்போது, சாந்தினி பாஷா படிக்கட்டில் அமர்ந்து, செல்போனில் விளையாடிக்கொண்டிருந்தார்.

அங்கு தண்டவாளம் பகுதியில் நின்றிருந்த 3 மர்ம நபர்கள் சாந்தினி பாஷாவின் செல்போனை பறித்துக்கொண்டு ஓடினர்.

இதனால் பதறிப்போன சாந்தினி பாஷா அவர்களை பிடிக்க ஓடும் ரெயிலில் இருந்து குதித்ததில், கீழே விழுந்து அங்குள்ள கற்களில் அடிப்பட்டு சம்பவ இடத்திலேயே இறந்தார். இது குறித்து தகவல் கிடைத்ததும், கொருக்குப்பேட்டை ரெயில்வே போலீசார் விரைந்து வந்து சாந்தினி பாஷா உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

அதில், எண்ணூர் பகுதியை சேர்ந்த நாகராஜ் (22), சூர்யா (19) ஆகிய 2 பேரையும் கொலை வழக்கில் கைது செய்து செல்போனை பறிமுதல் செய்தனர். மேலும் இந்த வழக்கில் தலைமறைவான ஒருவரை தேடி வருகின்றனர். செல்போனை பறிகொடுத்தவர் வழிப்பறி திருடர்களை பிடிக்க சென்று ஓடும் ரெயிலில் இருந்து கீழே விழுந்து இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்