கோவையில் சிறப்பு குறைதீர்க்கும் முகாம் ரூ.3¾ கோடியில் நலத்திட்ட உதவிகள் - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கினார்
கோவையில் நடந்த சிறப்பு குறைதீர்க்கும் முகாமில் ரூ.3¾ கோடியில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கினார்.
கோவை,
கோவை புலியகுளத்தில் உள்ள மாநகராட்சி பெண்கள் உயர் நிலைப்பள்ளியில் தமிழக முதல்-அமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நடந்தது. இதற்கு கலெக்டர் ராஜாமணி தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் பி.ஆர்.ஜி.அருண்குமார், அம்மன் அர்ச்சுனன், மாநகராட்சி தனி அதிகாரி ஷ்ரவன் குமார் ஜடாவத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட வருவாய் அதிகாரி ராமதுரை முருகன் வரவேற்றார்.
இதில் தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கலந்து கொண்டு ஏராளமானோரிடம் இருந்து மனுக்களை பெற்றுக்கொண்டார். அத்துடன் 894 பேருக்கு ரூ.3¾ கோடியில் நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியால் மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக அரசை தேடி மக்கள் என்ற நிலை மாறி, மக்களை தேடி மாவட்ட நிர்வாகம் என்ற உன்னத நிலை ஏற்பட்டு உள்ளது.
அரசு நலத்திட்டங்களை பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் கிராமங்கள் தோறும் முகாம் நடத்தப்பட்டு வருகிறது. தற்போது நடத்தப்படும் சிறப்பு முகாம் தொடர்பாக ஏற்கனவே பொதுமக்களுக்கு தெரிவிக்கப்பட்டு அவர்களிடம் இருந்து பெற்ற மனுக்கள் மூலம் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது.
கோவை மாவட்ட மக்களின் நீண்டகால கனவான மெட்ரோ ரெயில் திட்டத்தை செயல்படுத்த சென்னை மெட்ரோ ரெயில் கார்ப்பரேசன் மூலம் களஆய்வு நடைபெற்று வருகிறது.
மேலும் கிராமப்புற மாணவர்கள் எளிதாக உயர்கல்வி கற்கும் வகையில் பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், தொண்டாமுத்தூர் பகுதிகளில் புதிதாக அரசுகலைக்கல்லூரிகள் தொடங்கப்பட்டு உள்ளது. பொதுமக்கள் எளிதாக அரசு அதிகாரிகளை தொடர்பு கொள்ளும் வகையில் மதுக்கரை, பேரூர், ஆனைமலை ஆகிய தாலுகாக்களும், கோவை வருவாய் கோட்டமும் தொடங்கப்பட்டு உள்ளது. இதுதவிர குறிச்சி, குனியமுத்தூர், வடசித்தூர், இடிகரை, செம்மேடு ஆகிய பகுதிகளில் புதிதாக ஆரம்ப சுகாதார நிலையங்கள் தொடங்கப்பட்டு உள்ளன. கரடிமடை, தாளியூர், கல்வீரம்பாளையம், நல்லட்டிபாளையம் ஆகிய பகுதிகளில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் தரம் உயர்த்தப்பட்டு உள்ளன.
இவ்வாறு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசினார்.
முகாமில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ரூபன் சங்கர் ராஜா, மகளிர் திட்ட அதிகாரி செல்வராசு, கோவை தெற்கு ஆர்.டி.ஓ. தனலிங்கம், அ.தி.மு.க. பகுதி செயலாளர் செல்வகுமார், முன்னாள் கவுன்சிலர்கள் சக்திவேல், கணேசன் மற்றும் முன்னாள் மண்டல தலைவர் ஆதிநாராயணன் பப்பாயா ராஜேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.