பாப்பிரெட்டிப்பட்டியில் மோட்டார் வாகன ஆய்வாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை
பாப்பிரெட்டிப்பட்டியில் மோட்டார் வாகன ஆய்வாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று சோதனை நடத்தினர்.
பொம்மிடி,
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியை சேர்ந்தவர் குமார் (வயது 45). இவர் சென்னை கே.கே. நகரில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் மோட்டார் வாகன ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். இதனிடையே நேற்று முன்தினம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை நடத்தினர்.
இந்த நிலையில் தர்மபுரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜன், இன்ஸ்பெக்டர் ஜாபர் உசேன் தலைமையிலான போலீசார் நேற்று காலை பாப்பிரெட்டிப்பட்டியில் உள்ள மோட்டார் வாகன ஆய்வாளர் குமார் வீட்டுக்கு சென்றனர். அவர்கள் வீட்டின் கதவை பூட்டி கொண்டு ஆய்வு செய்தனர். சுமார் 2 மணி நேரத்திற்கு பிறகு லஞ்ச ஒழிப்பு போலீசார் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.
இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் கூறும்போது, சென்னை கே.கே. நகரில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நேற்று முன்தினம் லஞ்ச ஒழிப்பு சோதனை நடந்தது. அதன் ஒரு பகுதியாக பாப்பிரெட்டிப்பட்டியில் உள்ள மோட்டார் வாகன ஆய்வாளர் குமாரின் வீட்டில் சோதனை நடத்தினோம். அங்கு ஆவணங்களோ, பணமோ எதுவும் கிடைக்கவில்லை என்று தெரிவித்தனர். மோட்டார் வாகன ஆய்வாளர் குமார் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்திய சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.