புரட்டாசி 3-வது சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு: திரளான பக்தர்கள் தரிசனம்

புரட்டாசி 3-வது சனிக்கிழமையையொட்டி நெல்லையில் உள்ள பெருமாள் கோவில்களில் நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2019-10-05 21:30 GMT
நெல்லை,

புரட்டாசி 3-வது சனிக் கிழமையான நேற்று நெல்லை அருகே உள்ள மேலதிருவேங்கடநாதபுரத்தில் உள்ள தென் திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் அதிகாலை 5 மணிக்கு பெருமாளுக்கு திருமஞ்சனமும், சிறப்பு அலங்கார தீபாராதனையும் நடந்தது. நள்ளிரவில் கருடசேவை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை வழிபட்டனர். கீழதிருவேங்கடநாதபுரத்தில் உள்ள வரதராஜபெருமாள் கோவிலிலும் நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது.

நெல்லை சந்திப்பு சன்னியாசி கிராமத்தில் உள்ள வெங்கடாசலபதி கோவிலில் நேற்று காலையில் பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம், அலங்கார தீபாராதனை நடந்தது. வெங்கடாலபதி, வைர முடி அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இரவில் கருடசேவையும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை வழிபட்டனர்.

நெல்லை அருகன்குளம் காட்டு ராமர் கோவிலில் புரட்டாசி சனிக்கிழமையையொட்டி ராமருக்கு காலையில் சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்தது. மதியம் 12 மணிக்கு ராமர், சீதாபிராட்டி, லட்சுமணர், ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை நடந்தது. மதியம் 1 மணிக்கு அன்னதானம் நடைபெற்றது. மாலை 6 மணிக்கு ராமர் வீதி உலா நடந்தது.

அருகன்குளம் எட்டெழுத்து பெருமாள் கோவிலில் அதிகாலை 5 மணிக்கு எட்டெழுத்து பெருமாள், ஆதிசிவன், சிவசுப்பிரமணியர், பெரியபிராட்டி அம்மன், இளையபெருமாள், ஆத்தியப்பர், ஆஞ்சநேயர், விநாயகர், முருகன், மாயாண்டி சித்தருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனைகள் நடந்தது. மாலை 6 மணிக்கு பெருமாள் அலங்கரிக்கப்பட்ட கருட வாகனத்தில் மோகினி அலங்காரத்தில் தாமிரபரணி கோசாலை ஜடாயூத்துறைக்கு எழுந்தருளினார். அங்கு பெருமாளுக்கு சிறப்பு ஆராத்தி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். நெல்லை சந்திப்பு வரதராஜ பெருமாள் கோவிலில் நேற்று காலை 8 மணிக்கு வரதராஜபெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம், அலங்கார தீபாராதனையும் நடந்தது. இதில் அமைச்சர் காமராஜ் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை வழிபட்டனர்.

பாளையங்கோட்டை ராஜகோபால சுவாமி கோவிலில் காலையில் பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம், அலங்கார தீபாராதனையும், இரவில் கருடசேவையும் நடந்தது. இதேபோல் டவுன் கரியமாணிக்க பெருமாள், லட்சுமி நரசிம்மர், சேரன்மாதேவி அப்பன் வெங்கடாஜலபதி, பாளையங்கோட்டை அருகே உள்ள சீவலப்பேரி அழகர் சுந்தர்ராஜ பெருமாள் உள்ளிட்ட பெருமாள் கோவில்களில் நேற்று புரட்டாசி சனிக்கிழமை சிறப்பு வழிபாடு நடந்தது.

மேலும் செய்திகள்